- நவீன் ஸ்ரீதர்.வி
கடந்த கட்டுரையில், மதுரை தலத்தின் சிறப்புகளையும் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பெருமையையும் பார்த்தோம். அப்பேர்ப்பட்ட தெய்வங்களின் வரலாற்றை வரும் பதிவுகளில் பார்ப்போம்!
பொதுவாக சுந்தரேஸ்வரரான சொக்கநாதரை "வீட்டோடு மாப்பிள்ளை" என்றும் அன்னை மீனாட்சியை திருமணம் செய்தபின் மதுரைக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது தவறு. எனில் ஈசன் எப்போது வந்தார்?
எப்போது உலகம் சிருஷ்டிக்கப்பட்டதோ அப்போதே வந்துவிட்டார். அதுவும் சுயம்பு லிங்கமாக.. உலகின் முதல் சுயம்பு லிங்கமாக! இதை தான் திருநாவுக்கரசர் தேவாரத்தில் "முளைத்தானே எல்லோர்க்கும் முன்னே தோன்றி" என்று இத்தல இறைவனான சொக்கநாதரைப் பாடுகிறார். மேலும் "அளவில்லாப் பல் ஊழி கண்டு நின்ற தீர்த்தனை தென்கூடல் திருஆலவாய் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே" என்று அளவற்ற பல ஊழிகாலங்களை(ஊழி என்பது உலகப் பேரழிவு, ஒவ்வொரு ஊழிகாலத்திற்கு பின்னும் உலகம் புதிதாக தொடங்கும்) பார்த்து கடந்து நிலைத்து நிற்பவராக மதுரை சொக்கலிங்கப்பெருமானை போற்றுகிறது தேவாரம்.
ஸ்ரீ ஹாலாஸ்ய மகாத்மியம், வேம்புளிபுத்தூரார் திருவிளையாடல் புராணம்,கல்லாடம் முதல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் வரை இதையே கூறுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக தன் அடியவரான புலவர் பாணபத்திரருக்காக சேர மன்னர் சேரமான் பெருமாள் நாயனாருக்கு சிவபெருமானே கைப்பட எழுதி அனுப்பிய திருமுகத்தில்(ஓலைக்கடிதம்) "ஆலவாயில் மண்ணிய சிவன் யான் மொழிதரு மாற்றம் " என்று தான் நீங்காது நிலைத்து விரும்பி உறையும் இடமாக திருஆலவாய் எனப்படும் மதுரை தலத்தையே குறிப்பிடுகிறார். இதை தவிர நமக்கு வேறு ஆதாரங்கள் வேண்டியதில்லை.

பொதுவாக பழமையான சிவாலயம் என்றும் முதல் சிவாலயம் என்றும் சில தலங்கள் பிரபலமாக பேசப்படுவதுண்டு. தற்காலம் உத்தரகோசமங்கை கோவில் உலகின் முதல் சிவாலயமாக சொல்லப்பட்டாலும் அதன் தல வரலாறு திருஆலவாய் எனப்படும் மதுரை தலத்திலேயே தொடங்கி முடிகிறது. எனவே மதுரை தலமானது அதற்கும் மூத்தது என்பதை உணரலாம். மேலும் சிதம்பரம், திருவாரூர் போன்ற தலங்கள் மிகப்பழமையானதாக சொல்லப்படுகிறது. மேலும் புராதானமான சிவாலயங்கள் அனைத்திலும் பள்ளியறைபூஜை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெறும்.அதில் வணங்கப்படும் சிவபெருமான் மூர்த்தம் சிறிய அளவில் இருக்கும்.
சில ஆலயங்களில் உருவமாகவும், சில ஆலயங்களில் வெறும் பீடம், அதன்மீது பாதுகை மட்டும் , என சிவபெருமானை அரூபமாகவும் (உருவமற்ற நிலை) வழிபடும் வகையில் இருக்கும். அனைத்து சிவாலயங்களிலும் இந்த பள்ளியறை மூர்த்தத்தின் பெயர் சொக்கநாதர் தான். ஆக அனைத்து சிவாலயங்களிலும் முதல் மற்றும் கடைசி பூஜை நடைபெறுவது சொக்கநாதருக்கு தான். எனவே இதை வைத்தும் மிகப்பழமையான மூர்த்தியாக மதுரை சொக்கநாதரே திகழ்கிறார் என்று கூறலாம். அந்த இறைவன் சுயம்புவாக தோன்றிய காலத்தில் மதுரை நகரம் இல்லை. அப்போது அது கடம்பவனம். கடம்ப மரங்கள் நிறைந்த காட்டில் மிகவும் சிறப்பான கடம்ப மரத்தின் அடியில் சுயம்புவாக தோன்றியுள்ளார் சொக்கநாதர்.
கடம்ப மரம் பல்வேறு சிறப்புக்களை பெற்றது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், த்ரிபுரசுந்தரி அஷ்டகம் போன்றவை அம்பிகையை கடம்ப வனத்தில் மிகவும் உரும்பி உறைபவளாய் சொல்கின்றன. கவி காளிதாசர் இயற்றிய ஸ்ரீ ஷ்யாமளா தண்டகத்தில் அவர் கற்பக தருவுக்கு நிகரான கடம்ப மரங்கள் நிறைந்த வனத்தில் விரும்பி வசிப்பவளாக அம்பிகையை போற்றுகிறார். சங்கத் தமிழ் இலக்கியங்களோ முருகனுக்கும் மிகவும் பிடித்ததாக கடம்ப மலர்கள் உள்ளதை குறிப்பிட்டு முருகனுக்கு "கடம்பன்" என்ற திருநாமத்தையும் கூறுகிறது. ஸ்ரீ மத் பாகவத புராணமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் கடம்ப மரத்தடியில் விரும்பி விளையாடியதாக கூறுகிறது. இப்படி அனைத்து தெய்வங்களுக்கும் விருப்பமுள்ள கடம்ப மரமே அனைத்துக்கும் ஆதாரமான சிவபெருமானுக்கும் பிடித்ததாக உள்ளது. எனவே தான் இந்த தன்னிகரற்ற புண்ணிய பூமியான கடம்ப வனத்தில் சிவபெருமான் முதல் சுயம்பு லிங்கமாக தோன்றுகிறார்.
பிற்காலத்தில் அம்பிகையும் இதே கடம்ப வனத்தில் அவதரித்தாலும் அதற்கு முன்னரே எப்போது சிவபெருமான் இங்கே முதல் சுயம்பு லிங்கமாக தோன்றினாரோ அப்போதே அதே கடம்பவனத்தில் சிவலிங்கத்துக்கு சற்று தள்ளி மூத்த முதல் சக்தி பீடமாக சுயம்புவாக தோன்றினாள். (அவ்விடமே தற்போது மதுரை கோவிலில் மீனாட்சி அம்மன் நிற்கும் இடம்) எனில் இக்கடம்ப வனத்தின் பெருமைதனை வார்த்தைகளால் விவரித்தல் ஆகாது. அப்பேர்ப்பட்ட கடம்பவனமாக இருந்த மதுரையில் இன்று மிக சொற்ப அளவில் தான் கடம்ப மரங்கள் உள்ளன. இதை படிக்கும் அன்பர்கள் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இடமிருப்பின் இத்தகைய சிறப்பு வாய்ந்த கடம்ப மரங்களை நட்டு வளர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
கடம்பவனம் பின்னர் எப்படி அழகிய மதுரை நகரமானது என்பது பற்றி அடுத்த பதிவில் சிந்திப்போம் சிறப்பாக..!
மீனாக்ஷீம் !!!
Women's Day: மகளிருக்கு வாக்குறுதிகள்.. நாளை மாமல்லபுரத்தில் அறிவிக்கிறார் விஜய்.. தவெக தகவல்
வாக்கு சதவீதத்தை காட்டி அழுத்தம் தர மாட்டோம்: நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
கூட்டணி வெற்றிக்காக தியாகம் செய்ய காங்கிரஸ் தயார்: மாணிக்கம் தாகூர் பல்டி
ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு
ஓபிஎஸ் போடி தொகுதியில் போட்டி?...விருப்பமனு அளித்த மகன் ரவீந்திரநாத்
தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?
திமுக கூட்டணியில் கமல் கட்சிக்கு எத்தனை சீட்? வெளியான பரபரப்பு அப்டேட்
துபாயில் ஏவுகணை தாக்குதல் ...மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தல்
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ரிசல்ட் ...இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை பெண் சாதனை
{{comments.comment}}