கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
சென்னை: கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சம்பவம் நடந்த கரூர் வேலுசாமிபுரத்தில் சிபிஐ அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த 17 ஆம் தேதி முதல் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஆழமான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
ஒரு குழு கரூரில் விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்றொரு குழு பனையூரில் விசாரணை நடத்தி வருகிறது. பரப்புரை வாகனத்தை ஆய்வு செய்து அதில் உள்ள சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.