காற்றின் மொழி!
Oct 22, 2025,12:44 PM IST
- கா. ச. ஷர்மிளா
காற்றின் இசை
தென்றல் வேண்டுமெனில்
கமழ்ந்து தவழ்ந்து
செல்ல சோலைகள்
வேண்டுமடி...!
மலைகளில் தவழும்
கருமுகில் காற்றின்நாதம் வேண்டுமெனில்...!
மலைகள் எல்லாம்
மனைகளாக மாறாமல்
காக்க வேண்டுமடி....!
சுட்டெரிக்கும் சூரியனின்கதிர்களால்
அனல் காற்றாக
மாறாமல் இருக்க
மரங்களை வளர்க்க
வேண்டுமடி...!
சிலு சிலுவென்ற
காற்றின் மென்மையில்...!
வலம் வர...!
ஆறு குளம் ஏரிகள்
நிரம்பி வழிய
வேண்டுமடி....!
சப்தஸ்வரங்கள் ஒலிக்க
மூங்கில் நாணலுடன்
இதமாய் பேச
அழியா காடுகள்
வேண்டுமடி...!
நோய்நொடி இல்லா
மனிதகுலம் தழைக்க
நச்சுவாயு இல்லா
நாகரீகவளர்ச்சி வேண்டுமடி...!
வளர்ச்சி என்ற மோகத்தில்
வான்வெளியில் ஆராய்ச்சி
ஆராய்ச்சி துகளினால்
நஞ்சாகும் என் மூச்சு...!
வேதி தொழிற்சாலைகளால்
திக்கு முக்காடும்
என் மூச்சு...!
மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வை வளர்க்க வேண்டுமடி...!
என் மொழி..!
ஒலியா...! ஓசையா...!
நாதமா...! கீதமா...!
சப்தமா..! ஸ்வரமா...!
இல்லை சாபமா...!
என்று நீயே கூறடி...!