காகிதம்!

Su.tha Arivalagan
Apr 24, 2026,03:42 PM IST

- அ. தாமஸ் 


தன் மதிப்பால் பிறர் மதிப்பை உணர்த்துவது!

தன்னை மதிப்பவரையும் பிறர் மதிக்க உயர்த்துவது! 

தன்னை இழந்து பிறரின் இருப்பை உலகில் நிறுத்துவது! 

தான் உருவத்தில் சிறுத்தாலும் உயர் மதிப்பைப் பெறுவது!

உருவத்தில் பெருத்து தன் மதிப்பை இழந்தும் பிறர் மதிப்பை உயர்த்துவது!


சிலர் மனமோ பணமான காகிதத்தைத் தன் இனமெனக் கருதி சேகரிக்கவே துணிகிறது- ஆனால் 

பலர் மனமோ இதை எதார்த்தம் எனக் கருதி உயர் நூல்களையே தன்வசமாக்க தன் முனைப்போடு தேடுகிறது!


காகிதம் நம்மில் பணம் நூல் என பல வேடம் தரித்தாலும்  மரங்களுக்கு அது மரணம் தான்! 

ஒவ்வொரு மரமும் தன்னை இழந்தே தன் நிலையை மாற்றுகிறது நாம் அனுபவிக்க! 

தேவைக்குப் பயன்படுத்தலாம் அதே நேரத்தில் தேவையில்லாமல் பயன்படுத்தலாமா?

அதுவும் ஓர் உயிர் என ஏன் யோசிக்க மறுக்கிறோம்?




மரம் தான் இப்புவியின் இதயம் மரத்தை இழந்தால் இப்புவியே விரைவில் அழியும்-எனவே 

மரங்களை பால் சுரக்கும் மடியெனக் கருதி கரக்கலாம் அதே நேரத்தில் அம்மடியை அழிக்கலாமா?

யோசிப்போம் இனியாவது அது தரும் பலனை ஏற்போம் அவற்றை அழிக்காமல்.


காகிதம் ஒன்றும் நினைத்தவுடன் கிடைத்து விடுவதில்லை மரமும் மூங்கிலும் சணலும் புல்லும் பருத்தியும் வைகோலும்  யூக்கலிப்டஸ் பைன் ஸ்ப்ரூஸ் ஃபிர் மரங்களும் தன்னை இழந்தே தரணிக்குக் காகிதம் கொடுக்கிறது.

காகிதம் இல்லா தேசம் படைப்போம் என்று வார்த்தையில் சொல்லுகிறோம்- ஆனால் 

எவ்வளவு இடங்களில் பயனற்ற காகிதம் படைக்க பயன் தரும் மரங்களை அழிக்கிறோம் -சிந்திப்போம் 


மரங்கள் வாழ்ந்தால் தான் இம்மானுடம் வாழும்- எனவே 

மானுடம் வாழ மரங்களை அழிக்காதிருப்போம்.

மின்னூல் மின்னஞ்சல் மின்தாள் என வளர்ச்சிகள் பல கண்டும் கூட 

மரங்களை அழிப்பதில் தான் மானுடம் மகிழ்ச்சி கொள்கிறது-ஏனெனில்  

இவையெல்லாம் பணமில்லா வளர்ச்சி; பல மனிதருக்குப் பணம் தானே மகிழ்ச்சி.

மரங்கள் இல்லா மகிழ்ச்சி மரணத்தின் நுழைவாயில்! மரங்களுடன் மகிழ்ச்சி மானுடத்திற்கு நிறை ஆயுள்!


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)