அமைதியின் சிகரம் யோகினி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

Su.tha Arivalagan
Jun 15, 2026,12:10 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


அன்று சமூகவியல் பாடம்.பயிற்சிப் புத்தகத்தில் தன் நண்பரை வரைந்து அவரிடம் உள்ள நற்பண்புகளை எழுத வேண்டும்.


ஒவ்வொருவரும் அவரவர் நண்பர்களை வரைய ஆரம்பித்தார்கள். யோகினி அமைதியான ஆரவாரமில்லாத மாணவி...அழகாக வரைவாள்....


அவள் தன் தோழி வசுமிதாவை வரைந்தாள். வரைந்து அவளைப் பற்றி எழுதினாள்.அப்படியே அழகாக வசுமிதாவைப் போலவே அச்சு அசலாக வரைந்திருந்தாள்.


வழக்கம் போல் எண்ணும் எழுத்தும் குழுவில் அனுப்பியிருந்தேன்.அவளுக்கு ஏகப்பட்ட பாராட்டு... அவளிடம் அவளுக்கு கிடைத்த பாராட்டைப் பகிர்ந்தேன்.அதற்கு அவள் உங்களை நான் வரையட்டுமா?என்றாள்.




எனக்கு மகிழ்ச்சியும் ஆச்சர்யமும்.. சரி  என்றேன்... சாக்பீஸ் கொடுங்க என்றாள்.. எதற்கு என்று கேட்டேன்...போர்டில்  வரைகிறேன் என்றாள்.


வரைந்ததோடு நில்லாமல்,என்னைப் பற்றிய நற்பண்புகளையும் எழுதினாள். பிறகு எங்களுடைய அன்புத்தாய் போன்ற ஆசிரியர் என்று எழுதினாள்.


அவளைக் கட்டியணைத்து உச்சி முகர்ந்தேன்...‌


இதுக்கு மேல என்ன வேணும்...இதோ என் மாணவி எனக்கு தேசிய விருது கொடுத்து விட்டாள்... பெருமையுடன் இதையும் குழுவில் பகிர்ந்தேன்.




மாநில அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்காக சமூகவியல் பாடத்திற்கு தயாரிக்கப்பட்ட கையேட்டில் யோகினி அவள் தோழியை வரைந்த புகைப்படம் இடம்பெற்றது.


ஆங்கிலப் பாடத்திற்கு தயாரிக்கப்பட்ட வீடியோவில் யோகினி வரைந்த என் புகைப்படத்தை இடம் பெறச் செய்திருந்தார்கள்.


என்னுடன் சேர்ந்து ஒரு நான்கைந்து ஆசிரியர்களின் புகைப்படங்களைக் காண்பித்து, ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் வகுப்பறைகளில் பாடம் நடத்துகின்றனர்.


ஆனால் ஒரு சிலர் மட்டுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்ற வாக்கியத்தை ஒலிக்கச் செய்து இருந்தார்கள்..


அட்டகாசம் தொடரும்...


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).