பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்: செல்வப்பெருந்தகை!

Meenakshi
Nov 21, 2025,06:36 PM IST

 சென்னை: பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பல்வேறு முனைகளில் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிற வகையில் இத்தகைய அணுகுமுறையை கையாளப்பட்டு வருகிறது. பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற வேளாண்மை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றபோது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு ஏற்ற வகையில் உரிய அறிவிப்புகள் வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. அவர் பயணம் முடிந்த மறுநாளே இரண்டு செய்திகள் தமிழகத்தை பாதிக்கிற வகையில் வெளிவந்திருக்கின்றன.




காவிரி டெல்டா விவசாயிகள் அறுவடை செய்கிறபோது செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழைப்பொழிவின் காரணமாக கொள்முதல் செய்யப்பட நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் 17 சதவீதத்தில் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி கடிதம் எழுதினர். அந்த கடிதத்தை ஒட்டி மத்திய அரசின் ஆய்வுக்குழு அக்டோபர் 25 முதல் 28 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் காவிரி டெல்டாவில் கொள்முதல் செய்கிற நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து அறிக்கையும் வழங்கினார்கள். அதற்கு பிறகு கோவை வருவதற்கு முன்பாக மீண்டும் ஒரு கடிதத்தை பிரதமருக்கு முதலமைச்சர் எழுதினர். அதற்கான அறிவிப்பு கோவை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்த்தோம்.


ஆனால் நேற்று மத்திய அரசு கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த முடியாது என்று தமிழகத்தின் கோரிக்கை மறுக்கப்பட்டிருக்கிறது. மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. விவசாயிகளின் துயரத்தை பற்றியோ, அவர்கள் சிந்தும் கண்ணீரை பற்றியோ கடுகளவு கூட கவலைப்படாத பிரதமராக நரேந்திர மோடி செயல்பட்டிருக்கிறார். இது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும். இது குறித்து தமிழக முதலமைச்சரும் தமது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.


அதைப்போலவே கோவை, மதுரை மெட்ரோ ரயிலுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கோவை, மதுரை மாநகர் மக்கள் தொகையை விட குறைவான மக்கள்தொகை கொண்ட இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை பாஜக அரசு தொடங்கி நிறைவு பெற்று பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தமிழகத்தின் கோரிக்கையை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் மனோகர் லால் கட்டார் தமிழக அரசு தயாரித்து அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை கடந்த நவம்பர் 14 ஆம் தேதி தலைமைச் செயலாளருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதில் நிறைய தவறுகளும், குறைகளும் இருப்பதாக காரணம் கூறப்பட்டிருக்கிறது. இந்த காரணங்கள் அனைத்துமே நியாயமற்றவை ஆகும். தமிழகத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்ற மத்திய பாஜக அரசின் பாரபட்சப் போக்கையே இது வெளிப்படுத்துகிறது.


எனவே, இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் பல்வேறு முனைகளில் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிற வகையில் இத்தகைய அணுகுமுறையை கையாளப்பட்டு வருகிறது. பாஜக அரசின் ஒரவஞ்சனப்போக்கை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு உரிய பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.