நவராத்திரி 2025.. 9 நாள் தசரா விழாவின் சிறப்புகள்!

Swarnalakshmi
Sep 22, 2025,11:48 AM IST

- ஸ்வர்ணலட்சுமி 


நவராத்திரி என்பது  நம் நாட்டில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்பது நாட்கள் சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நவராத்திரி என்றாலே பொம்மை கொலு தான் நம் நினைவிற்கு வரும்.


இந்த வருடம் நவராத்திரி பண்டிகையானது செப்டம்பர் 22ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி அக்டோபர் 1ஆம் தேதி புதன்கிழமை முடிவடைகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, பத்தாம் நாள் விஜயதசமி அமைந்துள்ளது.


புரட்டாசி மாதத்தில் வரும் "சாரதா நவராத்திரி"யே பெரும்பாலான மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த விழா முப்பெரும் தேவியர்களின் அருளையும், அவர்களுக்குள் அடக்கமான முப்பெரும் தேவர்களின் அருளையும் பெறுவதற்குரிய சிறப்பான காலம்.ஆகையால் நவராத்திரி விழா என்பது மிகவும் சிறப்புக்குரிய விழாவாக  கருதப்படுகிறது . நவராத்திரி காலத்தில் தாய் துர்கா சக்தி,ஆற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறார்.




அன்னை பராசக்தி அசுரர்களை வதம் செய்து வெற்றி கொண்டதையே நவராத்திரி விழாவாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மஹாளய அமாவாசைக்கு பிறகு அடுத்த நாள் பிரதமை திதி துவங்கி அஷ்டமி வரையிலான ஒன்பது நாட்களும் "நவராத்திரி "என்றும், பத்தாவது நாளை "விஜயதசமி "என்றும் கொண்டாடுகிறோம்.


நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும்,அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும்,கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம்.இந்த ஒன்பது நாட்களும் அம்பிகை ஒன்பது விதமான சக்திகள் போற்றி துதிக்கப்படுகின்றன.


வட மாநிலங்களிலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இது "தசரா" என்ற பெயரில் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். நவராத்திரி கொலு வைக்கும் வழக்கம் இருப்பவர்கள் செப்டம்பர் 22 திங்கட்கிழமை கொலு படிகள் அமைத்து,கலசம் வைத்து, கலசத்தில் அம்பிகையை ஆவாகனம் செய்து வழிபாடுகள் செய்வார்கள்.


அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, அம்பிகை குரிய பாடல்களை பாடியும் படித்தும், தீப தூப ஆராதனைகள் செய்து, மாலை வேளையில் உறவினர்கள், அண்டை வீட்டார் அனைவரையும் அழைத்து, அம்பிகைக்கு படைத்த நைவேத்தியத்தை பிரசாதமாக அளித்து மகிழ்வார்கள். தீமையை நன்மை வெற்றிகொண்ட நாளான நவராத்திரி -ஒன்பது நாளும் அம்பிகையே விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் தீமைகள்,துன்பங்கள் விலகி முப்பெரும் தேவியரின்  அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.


நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் அனைவரும் அனைத்து வளங்களும்,நலங்களும் பெற்று  வாழ்வோமாக. மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.