Short Real Story: காகங்களின் தந்திரம்

Su.tha Arivalagan
Jun 26, 2026,02:54 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


சிந்தனைகளை வளர்ப்பது இயற்கை. ஏன் எதற்கு என வினா எழுப்ப வைப்பது வியப்பு. தினமும்  இனிய மாலைப் பொழுதில் வீட்டில் இரண்டாவது அடுக்கு பால்கனியில் விளக்குகளை போட்டுவிட்டு சிறிது நேரம் இயற்கையை ரசிப்பது வழக்கம். 


ஒருநாள் இதேபோன்று விளக்குகளை(லைட்) போட்டு நானும் என் கணவரும் அமர்ந்திருந்தோம். அவர் பாடல்களை கேட்பார் கைபேசியில். நான் கவிதை எழுதுவது, வானத்தின் மாலைநேர அழகை ரசிப்பது, பறவைகளின் கூடுகளில் திரும்பும் அழகு மற்றும் அவை மொட்டை மாடியில் நிறைய காகங்கள் ஜோடி ஜோடியாக அமர்ந்து அமர்ந்து பேசிக்கொள்ளும் அழகு என அனைத்தையும் ரசிப்போம். 


ஒருநாள் வழக்கம் போல பால்கனியில் அமர்ந்து இருந்தோம். அப்போது தான் நான் வியந்து வியப்பும் நிகழ்வு நடந்தது. இதை இதைப் படிக்கும் நீங்கள் இதைப் போல நிகழ்வை பார்த்திருப்பீர்களா என தெரியவில்லை.. வழக்கத்திற்கு மாறாக பறவைகள் அமர்ந்து பேசிக் கொள்ளவில்லை. இங்கேயும் அங்கேயும் என பறந்து கொண்டிருந்தன மாடியில் என்பதால் மிகவும் அருகிலேயே  பறந்து கொண்டிருந்தன. ஏதோ ஒரு சினிமா படம் பார்ப்பது போல இருந்தது. பறவைகள் பறக்கின்றன ஓரிடத்தில் சிறிது நின்று இறகை அடித்துக் கொண்டே  இருக்கின்றன.




என்ன இது பறவைகள் சண்டை போடுகின்றனர் என நினைத்தேன். இல்லை வேறு ஏதோ நடக்கின்றது என யூகித்தேன். சற்று நிதானித்து கவனித்தேன் அப்போது தான் புரிந்தது அவை வேட்டையாடுகின்றன என்று. நான் காட்டில் விலங்குகள் வேட்டையாடும் என்பதை அறிந்திருக்கிறேன். இது என்ன புது வேட்டை  வானிலே ஒரு வேட்டை என வியந்தேன் தெளிந்தேன் . பறவைகள் பறக்கின்றன. அவை ஏதோ ஒரு பறக்கும் பூச்சியை லாவகமாக பிடிக்கின்றன. பின்னர் மாடியில் சுவரில் அமர்ந்து அதை கீழே வைத்து கொத்தி தின்றன. 


இதில் என்ன வியப்பு என்று கேட்கிறீர்களா அவை ஒன்றுக்கொன்று இடையூறு செய்து கொள்ளவில்லை. சண்டை போட்டுக் கொள்ளவில்லை. ஓய்வும் எடுத்துக் கொள்ளவில்லை. பிடிக்கின்றன உண்கின்றன. இதில் நான் வியந்து பார்த்த விஷயம், அது எவ்வாறு நுணுக்கமாக இரையை பிடிக்கின்றன என்பது தான்.


இயல்பாக பறந்து சற்று இலேசாக இறகை அசைத்துக் கொண்டே நின்று பிடித்து ஒரு கணத்தில் மீண்டும் பறந்து செல்கிறது. யார் கற்றுத் தந்த நுணுக்கம் என வியந்தேன். காலம் வரும் வரை காத்திருந்து  வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது இதுதானோ  என ரசித்தேன்.


வேகத்திலும் விவேகம் வேண்டும் என்பதை உணர்த்தின காக்கைகள் எனக்கு.. அவை என்ன வகையான பூச்சியுண்ணும் பிடித்து தின்னும் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.. ஈசல் என்றால் மேலே அவ்வளவு உயரம் பறக்குமா ... ஆனால் ஒரு சிறந்த  படம் பார்த்தது போல இருந்தது..  உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)