சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்? (பழமொழியும் உண்மை பொருளும்)

Su.tha Arivalagan
Dec 18, 2025,10:22 AM IST

- ஆ.வ. உமாதேவி


மோகன் சுமாராக படிக்கும் பையன். அவனுடைய அம்மா, அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கலன்னா அப்புறம் இருக்கு உனக்கு என்று கடிந்து பேசிக் கொண்டிருந்த வேளையில், அவனுடைய அப்பா, அவன் கிட்ட போய் ஏண்டி நடக்காத விஷயத்தை பத்தி பேசுற. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்று கூறி வருந்தினார். 


இருக்கும் சக்திக்கு மேல் எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதைத்தான் இந்த பழமொழி உணர்த்துகிறது. ஆனால், உண்மையில் இப்ப பழமொழியின் உண்மைப்பொருள் இது இல்லை. 


சஷ்டி என்பது மாத நாள்களில் அமாவாசை, பௌர்ணமி நாள்களை அடுத்து ஆறாவது நாளில் வரும் திதி ஆகும். இதில் வளர்பிறை சஷ்டி நாளில் முருகப்பெருமானை குறித்து விரதம் இருந்தால், மகப்பேறு சித்திக்கும் என்பது ஐதீகம். சஷ்டி திதியை வடமொழி எழுத்தை நீக்கிவிட்டு, தூய தமிழில் எழுதும் போது சட்டி திதி என்று எழுதுதல் இலக்கண மரபு ஆகும். அடுத்து அகப்பை என்று ஒரே சொல்லாக பொருள் பொருள் கொண்டோமானால், கரண்டி என்ற பொருளைத் தரும். ஆனால், அவ்வாறு ஒரே சொல்லாக பொருள் கொள்ளாமல் அகம் +பை=அகப்பை என்று பிரித்து பொருள் கண்டோமானால் அகப்பை என்பது பெண்ணின் கருப்பையை குறிக்கும். 




"சஷ்டியில் விரதம் இருந்தால், 

 அகப்பையில் வரும்"


சட்டியில் (சஷ்டியில்) (விரதம்) இருந்தால், அகப்பையில் (கருப்பையில்) (குழந்தை) வரும் என்பதுதான் இந்த பழமொழி உணர்த்தும் உண்மையான பொருள். மகப்பேரில்லாமல் வருந்துகிறவர்களுக்கு சஷ்டி விரதத்தை கடைபிடிக்குமாறு நம் முன்னோர்கள் கூறிய அறிவுரை, பின்னாளில் மருவி, இப்பழமொழி தவறான பொருள் கொள்ளப்பட்டு, சிதைந்து  சின்னா பின்னமடைந்து போகாமல், நாம் சரியான பழமொழியை சரியான பொருளோடு பயன்படுத்தி நன்மை பெறுவோம். 


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)