அஞ்சா மங்கை.. வீரத் தளபதி குயிலி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

admin
Jan 28, 2026,04:22 PM IST

- ஆ.வ. உமாதேவி


நம்மில் பலருக்கு திரைப்பட நடிகை குயிலியை தான் தெரியும். ராணி வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்கு உரிய தளபதி குயிலியை எத்தனை பேருக்கு தெரியும்? அவரது கதை கேட்கக் கேட்க சிலிர்க்க வைக்கும்.. அப்படிப்பட்ட வீர மங்கை அவர்.. அவரைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம் வாங்க.


ராணி வேலு நாச்சியார் மற்றும் அவரது தளபதி குயிலி ஆகியோரின் வீர வரலாறு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான அத்தியாயம் ஆகும். ராணி வேலு நாச்சியார் ராமநாதபுரம் மன்னர், செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியினருக்கு 1730 இல் ஒரே மகளாக பிறந்தார். இவர் ஒரு ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டு, வாள் வீச்சு, சிலம்பம் மற்றும் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றார். 


1772 இல் காளையார் கோவில் போரில், இவரது கணவர் முத்து வடுகநாதர், ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். இதை அடுத்து தனது மகளுடன் தப்பிச் சென்ற வேலு நாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாச்சியில் தங்கி, ஹைதர் அலி மற்றும் மருது சகோதரர்களின் உதவியுடன் மீண்டும் படையை திரட்டினார். 


1780 இல் சிவகங்கையை ஆங்கிலேயர் இடம் இருந்து மீட்டு, மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். இதன்மூலம் ஆங்கிலேயரை எதிர்த்து வென்ற இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். 


நம்பிக்கைக்குரிய தளபதி குயிலி!




வீர மங்கை குயிலி, வேலு நாச்சியாரின் "உடையாள் படை" என்ற பெண்கள் படையின் தளபதியாகவும் ராணியின் மெய்காப்பாளராகவும் திகழ்ந்தார். 


1780 இல் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போரில், விஜயதசமி நாளில், தன் உடல் முழுவதும் எண்ணெய் ஊற்றி, தீ பற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கிற்குள் சென்று ஆயுதங்களை அழித்து, தானும் தீக்கு இரையானார்.


குயிலி, இந்தியாவின் முதல் பெண் தற்கொலை போராளி மற்றும் முதல் பெண் தியாகி ஆவார். இந்நிகழ்வால் தான் ராணி வேலு நாச்சியார் அப்போரில் வெற்றி பெற முடிந்தது. ராணி வேலு நாச்சியார் மீதும் நாட்டின் மீதும் அவர் கொண்ட பக்தியை அவரது தியாகத்தின் மூலம் அறியலாம். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குயிலி, வீரமங்கை என போற்றப்படுகிறார். 


இவரது இந்த செயலால் நல்லது செய்ய இனம், மதம், ஜாதி, மொழி, பெரியவர், சிறியவர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற எந்த பாகுபாடும் தேவையில்லை என்பதை உணரலாம். வேலு நாச்சியாரின் போராட்ட வரலாற்றில் குயிலியின் தியாகம் ஒரு முக்கிய திருப்புமுனையாக  கருதப்படுகிறது.


குயிலியைப் பற்றிய கதைகள், ஜீவபாரதியின் "வேலு நாச்சியார்" புதினம் மூலம் பிரபலமடைந்தன. அவர், கற்பனை பாத்திரமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறினாலும், "வரலாற்றில் மறைக்கப்பட்ட தலித் வீராங்கனை" என்றும் பலர் கூறுகின்றனர். 


குயிலியின் வீரம், மண் விடுதலை மற்றும் பெண் விடுதலைக்கான ஒரு குறியீடாக பார்க்கப்படுகிறது. இன்றைய தலைமுறைக்கு இவரது வரலாறு புதிய பார்வையை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.


(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)