Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!

Su.tha Arivalagan
Jul 20, 2026,05:13 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


வாழ்த்த வயதில்லை! என்போருக்கு... வசைமாரிப் பொழிய வயது தடையில்லை! போலும்...


வாழ்த்துகள் என்பது அன்றாடம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதும் பரிமாறிக் கொள்ளும் காலை வணக்கமாக இருக்கட்டும், அல்லது ஒரு சிறிய ஹாய்! ஹலோ! என எதுவாக வேண்டுமானாலும்  இருக்கலாம். அதுவும் வாழ்த்தோடு சேர்த்தியே எனலாம். 


இவை தவிர்த்து அன்றைய தினத்தில் யாருக்கேனும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற ஏதேனும் சிறப்பு வாழ்த்துகள் இருந்தால் வாழ்த்துவோம். 


குறிப்பாகத் திருமண விழாக்களில் மணமக்களை அட்சதை தூவி இல்லறம் எனும் நல்லறத்தில் அடியெடுத்து வைத்தவரை, 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!' என்று பெரியவர்கள் மனதார வாழ்த்துவார்கள். 


இவையும் தவிர்த்து விஷேச நாட்களில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப்  பரிமாறி மகிழ்வோம்.  இப்படியாக வாழ்த்தும் போது, வீட்டுப் பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும்  சில வயதில் மூத்தவர்கள், அல்லது  அனுபவத்தில் பெரியவர்களிடம் ஆசீர்வாதங்கள் பெறுவோம்.


 


இதுவே, அப்பெரியவர்களின் பிறந்தநாள், அல்லது திருமண நாள்  போன்ற சிறப்பு தினங்களில் பொதுவாகச் சொல்லும் ஒரு வாசகம் "வாழ்த்த வயதில்லை... அதனால் வணங்கி மகிழ்கிறேன்!" என்பதைப்  பொதுவாகப் பயன்படுத்துவதைக் காணலாம். 


இதே 'வாழ்த்த வயதில்லை' என்ற வாயானது... பொதுவெளியாகிய சமூக வலைதளங்களில், யாரொருவரையும் விமர்சிக்கும் போது வயதையெல்லாம் வசதிபோல மறந்துவிட்டு, வாய்க்கு வந்தபடி ஏகவசனத்தில் வசைமாரிப் பொழிவதனையும் காண முடிகிறது. இது என்ன நியாயம்??!!??


பெரியவர்களோ, சிறியவர்களோ... யாராய் இருந்தாலும் முதற்படி வாழ்த்துவதற்குத் தேவை மனம்தான். நல்ல மனதோடு 'நல்லாயிருப்பா...!' 'நல்லாயிரும்மா...!' என்று ஒரு வார்த்தை சொன்னாலும் போதுமானது.  வாழ்த்துவதற்கு நிறைய காசுபணமெல்லாம் செலவிடத் தேவையில்லை. கொஞ்சமே கொஞ்சம் அன்பு இருந்தால் போதுமானது. அதுவும் இல்லாது போனாலும் கூட பரவாயில்லை. ஒரு சிறு சொல் வாழ்த்துகள் என்றாலும் போதுமானது. 


மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது போன்றே எதிரியாகவே இருந்தாலும் அவர்களின் பிறந்தநாளில் ஒரு வார்த்தை - 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று கூறினால், எப்படிப்பட்ட பகையாளிக்கும் மனம் கொஞ்சம் குளிரும். மகிழும். பகை மறந்து நட்பும் மலரும். 


நம்மால் இயன்ற சிறிய சிறிய செயல்களில் எல்லாம் அன்பை விதைக்கலாம். வாழ்த்துகளால் பிறரை மகிழ்வித்து நாமும் மகிழலாம்! 


உண்மையான உள்ளன்போடு இன்முகத்துடன் ஒருவரைப் பார்த்து வாழ்த்துகள் என்று கூறும் போது நமது உள்ளமும் மலர்ந்து மகிழும்  கேட்பவர் உள்ளமும் மலர்ந்து மகிழும். 


புன்னகை எப்படி ஒரு தொற்றுவியாதி போல ஒருவரில் இருந்து மற்றவருக்குப் பரவுமோ... அதுபோன்றே இந்த வாழ்த்துகளால் மன மகிழ்வை ஒருவரில் இருந்து மற்றவருக்குச் சுலபமாக கடத்த முடியும். 


உலகம் முழுவதும் தேவைப்படுவது ஆக்ஸிஜனுக்கு அடுத்தது அன்பே! நம்மால் முடிந்த அளவு அன்பை, இதுபோன்ற சிறு சிறு வாழ்த்துகள் வழி விதைப்போம்! மகிழ்வித்து மகிழ்வோம்!


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).