தேனல்லவே தேனல்லவே.. வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்!

Su.tha Arivalagan
Dec 04, 2025,04:31 PM IST

- புதிய கம்பன்


வானென்னும் தேன்கூட்டில்

வழிந்ததென்னவோ மழைத்தேன்

தேனல்லவே தேனல்லவே 

வழிந்ததெல்லாம் தேவாமிர்தம்.


யார் சேர்த்தது

யார் சேர்ப்பது 

யார்தான் தேனீயாய் மாறியது.

மலையுள்ளது 

மாபெரும் நிலமுள்ளது

இக்கூட்டில் வைக்க

எம்மலரில் தேனுள்ளது.

இலவம் இங்குள்ளது




இளம்பருத்தி இங்குள்ளது

இம்மாக்கூட்டை நெய்ய

எவர் வயிற்றில் மெழுகுள்ளது.


நீதானா 

ஓ நீயேதானா தேன் சேர்த்தது

அகிலத்தின் ஆதாரமாய் 

ஆகாய திலகமாய்

பூமியெங்கும் பூப்பூக்க செய்யும்

ஆதவனே 

நீதானா தேன் சேர்த்தது

தேனீயாய் மாறிநின்றது.


கயமென்னும் மலர்தேடி 

அனலென்னும் குழல்வைத்து

நீருறிஞ்சி நீராவியாய் தரித்து 

நீதானா தேன் சேர்த்தது

மேகமெழுகை வேய்ந்து

மழைத்தேனை உள்நுழைத்தது.


ஆகாயம் என்று சொல்லி 

ஆண்பாலில் யார் சேர்த்ததுன்னை

வான்கூட்டின் ராணித்தேனீயே

ஆண்பாலில் யார் சேர்த்ததுன்னை.

பாலினம் மாற்றி உன்னை 

பெண்பாலில் பார்க்கையிலே

இன்னும் கூட அழகாய் நீ.