மார்கழி மாதம் மட்டுமே காட்சி தரும்.. மரகதலிங்க தரிசனம்.. திருச்செங்கோடு!
- ஸ்வர்ணலட்சுமி
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாதம் மட்டுமே சுயம்பு மரகதலிங்கம் தரிசனம் பெறலாம். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருத்தலம் இன்று "திருச்செங்கோடு "என்று அழைக்கப்படுகிறது. இத்திருத்தலம் ஈரோட்டில் இருந்து கிழக்கில் சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், சேலத்தில் தென்மேற்கில் 45 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தில் ஒரு அற்புதமான விசேஷம் யாதெனில் மார்கழி மாதம் மட்டுமே பக்தர்கள் தரிசிக்கக் கூடிய மரகத லிங்கம் அருட்காட்சி நடைபெறும். திருச்செங்கோடு கொங்கு நாட்டு பாடல் பெற்ற தலங்கள் ஏழில் ஒன்றாக திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புகளாலும் பெருமையுடையது. இத்திருத்தலம் நல்லதொரு வரலாறும் நயன்மிகு புராணங்களும் கொண்டதாய் அம்மையும், அப்பனும் கலந்தொரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இத்திருத்தலத்தில் எழுந்தருளி நிற்கும் சிறப்பு வேறு தலத்திற்கு இல்லாத ஒன்றாகும்.
திருவாசகம், பெரியபுராணம்,திருப்புகழ், கந்தர் அனுபூதி,கந்தர் அலங்காரம்,தேவாரம் போன்ற திரு நூல்களில் திருச்செங்கோடு கோவில் போற்றப்படுகிறது. திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலிக்கின்றனர் .
இக்கோவிலில் அபூர்வமான அதிசயம் என்னவென்றால்...மார்கழி மாதம் மட்டுமே பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.பிற மாதங்களில் அதற்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இதற்காக மக்கள் அதிகாலை 3:30 மணியில் இருந்து கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் மார்கழி மாத கடும் குளிரையும் பொருட்படுத்தாது திரளாக வருகிறார்கள். இதற்கு அதிகாலை 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும்.
மரகத லிங்கத்தின் வரலாறு பார்ப்போமா...
பிருங்கி முனிவர், கைலாயம் வரும் வேளையில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு,அவரது அருகில் இருக்கும் உமா தேவியை வழிபடாமல் விட்டுவிடுவார். சிவனும், சக்தியும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில் சிவனை மட்டும் வணங்கும் வகையில் வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார்.இதை கண்டு கோபம் அடைந்த பார்வதி தேவி முனிவரே!.. சக்தியாகிய என்னை அவமதித்ததால் நீர் சக்தி இழந்து போவீர் என்று சாபம் விடுகிறார்.
பார்வதி தேவி சிவனின் இடப்பாகத்தை பெறுவதற்காக, இந்த மலையில் வந்து தவம் புரிந்து,கேதார கௌரி விரதம் இருந்து சிவனின் உடலின் இடப்பாகத்தை பெறுகிறார்." சக்தி இல்லையேல் சிவமில்லை" எனக் கூறி உமையவளக்கு தன் இடப்பாகத்தை கொடுக்கிறார். இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாட்கள் நடைபெறும். அவ்வாறு பார்வதி தேவி சிவனை நினைத்து தவம் செய்தபொழுது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார். பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். அர்த்தநாரீஸ்வரர் மூலவருக்கு முன்னால் மரகதலிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மரகதலிங்கத்தின் அருமையை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார்.தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். மரகத லிங்கத்தின் பெருமையை,சக்தியை எடுத்துக் கூறி இந்த லிங்கத்தை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விட வேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. பிற மாதங்களில் வேறு ஒரு லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டாராம்.
எனவே பச்சை நிற மரகதலிங்கம் மார்கழி மாதம் மட்டுமே பக்தர்கள் தரிசிக்க வைக்கப்படுகிறது.இந்த மரகத லிங்கம் பி ருங்கி முனிவரால் பூஜிக்கப்பட்டதாகவும், சிவன் -பார்வதி ஐக்கியத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. மார்கழி மாத சிறப்பு மரகதலிங்க தரிசனம் 16. 12. 20 25 ஆரம்பித்து 14. 01. 26 வரை நடைபெறும். இம்மாதம் முழுவதும் அதிகாலை 3.30 மணிக்கு மரகதலிங்கம் பால் அபிஷேகம் நடைபெற்று பூஜை நடைபெறுகிறது.
திருமலை கோவில் படிவழியே வரும் பக்தர்கள் அதிகாலை 3 :00மணிக்கு ராஜகோபுரம் வாசல் வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். வாகனங்களில் வரும் பக்தர்கள் மலை பாதை கேட் வழியாக அதிகாலை 3 கால் மணிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 7:00 மணி வரை பக்தர்கள் மரகதலிங்க தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். மார்கழி மாத முழுவதும் மாலை 6:30 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மரகதலிங்கம் தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்:
மரகதலிங்கத்தை அதிகாலையில் தரிசனம் செய்வதனால் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் என்பதால், மரகதலிங்கத்தை வழிபட கணவன் -மனைவி ஒற்றுமை மேம்படும். செல்வ வளம்,தொழில்
மேம்பாடு,சிறந்த வாழ்க்கை பெறக்கூடும். நாக தோஷம் நீங்கும் என்று கூறப்படுகிறது.
சுற்றுலா பிரியர்களுக்கும், சிவ பக்தர்களுக்கும் மரகதலிங்க தரிசனம் ஒரு அற்புதமான வாய்ப்பு. தவற விடாதீர்கள். மார்கழி மாதத்தில் ஒரு முறையேனும் திருச்செங்கோடு சென்று மரகதலிங்கம் தரிசனம் பெறுவது சிறப்பு.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.