திருக்குறள் – தித்திக்கும் மருந்து!
- தி. மீரா
நோய்க்கு மருந்தாய் நெஞ்சில் இறங்கும்,
நூறாண்டு சிந்தனையின் நறுமணம்.
சொல்லில் சிறியது; பொருளில் பெரிது,
சோர்வை தீர்க்கும் சீரிய அறிவு.
வாழ்க்கை வலிகளில் வழிகாட்டும்,
வழுவாமல் நடத்தும் ஒளிவிளக்கு.
இனிப்பாய் தித்தித்து நாவில் அமரும்,
இடரிலும் தைரியம் ஊட்டும் மருந்து.
அரசனுக்கும் அடியவர்க்கும் ஒரே அளவு,
அறத்திற்கான அளவுகோல்.
உடலுக்குப் பசி போல் உள்ளத்திற்கும்,
திருக்குறள் தேவை தினசரி உணவு.
கசப்பான உண்மையையும் கனியாக்கி,
கருணையோடு சொல்லும் கலை.
காலம் மாறினாலும் கருத்து மாறாது,
காலத்தை வெல்லும் நியதி.
மனமருந்தாய் மௌனத்தில் பேசும்,
மனிதனை மனிதனாக்கும் நூல்.
அறத்தின் அகில அகராதி.
படித்தால் போதும் பாதை தெரியும்,
பின்பற்றினால் பயணம் இனிது.
நாவில் இனிப்பு, நெஞ்சில் வலிமை,
திருக்குறள் — தித்திக்கும் மருந்து.
(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)