காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
புதுடெல்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவகளுக்கு பிந்தைய அரசியல் சூழல் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிப்பதற்காக, டெல்லியில் 'இந்தியா' (I.N.D.I.A.) கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பலர் நேரில் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையால்தான் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியும், மேற்கு வங்காளத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கும் தோல்வி ஏற்பட்டதாக திருமாவளவன் பகிரங்கமாக குற்றம் சாட்டிப் பேசினார்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க, டெல்லியில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்டோரின் முன்னிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய கட்சியான திமுக ஏற்கனவே இக்கூட்டத்தைப் புறக்கணித்திருந்த நிலையில், தற்போது ஆம் ஆத்மி கட்சியும் இக்கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தை இந்த இரு முக்கியக் கட்சிகள் புறக்கணித்திருப்பது 'இந்தியா' கூட்டணியினரிடையே சற்றே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் யார் யார்?
திமுக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் விலகியிருந்தாலும், கூட்டணியின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த முன்னணித் தலைவர்கள் இக்கூட்டத்தில் திரளாகப் பங்கேற்றுள்ளனர். மமதா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்)
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி கட்சி) தேஜஸ்வி யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்) வைகோ (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - மதிமுக) தொல். திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - விசிக) உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நேரில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அடுத்தகட்ட நகர்வு என்ன?
எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பிராந்தியக் கட்சிகளின் கோரிக்கைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் புறக்கணிப்பு தற்காலிகமானதா அல்லது கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வை பாதிக்குமா என்பது இக்கூட்டத்தின் முடிவில்தான் தெரியவரும்.
தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முழுமையான முடிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.