திருமுருக கிருபானந்த வாரியார் .. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
- கு. ரத்னா செந்தில்குமார்
என்ன தவம் செய்தோம் இப் பிறவியில் வாரியார் சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் அவரைக் கண்டோம் அவரின் குரலை கேட்டோம். ஆன்மீகத்தின் மெய்யுணர்வை உள்ளுணர்ந்து அனுபவித்தோம்
திருவண்ணாமலை எங்களின் சொந்த ஊர். சிறிய வயது முதல் திருவண்ணாமலை நடைபெறும் எல்லா விழாக்களிலும் கலந்து கொள்வோம். முக்கியமாக அருணகிரிநாதர் பெருவிழா ஆகஸ்ட் 15 16 17 மூன்று நாட்களில் நடைபெறும். வருடா வருடம் கண்டிப்பாக வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு இருக்கும். அம்மாவின் கரம் பற்றி நடந்து சென்று கோவிலில் சொற்பொழிவு கேட்ட காலங்கள் எல்லாம் மறக்க முடியாது. பொற்காலங்கள்.
சிறிய வயதில் ராஜகோபுரம் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு அங்கே திருமுருக கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகளை கேட்ட காலங்கள் உண்டு. சிறுவயது அப்போது. அவர் கேள்விகள் எல்லாம் கேட்பார். நான் என்னுடைய தோழிகள் என எங்கள் தெருவில் உள்ளவர்கள் எல்லோருமே சேர்ந்து ஐயாவின் சொற்பொழிவை கேட்க செல்வோம். ஒருமுறை மரத்திற்கு மரம் தாவுவது எது என்று கேட்ட போது என் தோழி குரங்கு என்று சொன்னாள். உடனே குரங்குக்கு பிடித்த பழம் இந்த வாழைப்பழம் என்று என் தோழிக்கு கொடுத்தார். அந்த நினைவு இன்னும் உள்ளது. நிறைய கேள்விகள் கேட்பார். அவருடைய சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று இருக்கும். அந்த அளவிற்கு இறை பக்தியும் கூடும் நகைச்சுவையும் இருக்கும். ஆன்மீகத்தின் பெருமையும் இருக்கும் .
அவர் முருகப்பெருமானின் மீது சொல்லும் ஒவ்வொரு பாடலும் அதன் விளக்கங்களும் அடடா இரு காதுகள் போதாது நமக்கு கேட்க. அவர் வாழ்ந்த காலத்தில் நான் குழந்தையாக கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக இருந்தேன் என்பதும் அவருடைய சொற்பொழிவுகளை என்னுடைய காதுகளால் கேட்டிருக்கிறேன். என்னுடைய கண்களால் பார்த்திருக்கிறேன். அவரைப் பற்றி என் நாவால் பேசியிருக்கிறேன் என்னும்போது ஐம்புலன்களும் என்ன தவம் செய்தது என்றே சொல்லலாம்.
அத்தகைய சிறப்புமிக்க திருமுருக கிருபானந்த வாரியாரின் வாரிசுகளால் எங்களுடைய தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் திருவண்ணாமலை திருமுருக கிருபானந்த வாரியாரின் பாடத்திட்டத்தை ஒரு வருடம் கொண்டு சென்று மக்களிடம் சேர்க்கும் செயலை முன்னெடுத்திருக்கிறோம். அந்த வகையில் பாடத்திட்டத்தின் ஆசிரியராக வாரியார் சுவாமிகளின் இளவல் மகனார் வாதவூரன் ஐயா அவர்கள் எங்கள் குழுமத்தில் இணைந்து வாரியாரின் கருத்துக்களை சொல்லும் போதும் பேசும்போதும் அதை காதுகளால் கேட்கும்போது இத்தனை எத்தனை மகிழ்ச்சி எங்களுடைய குழுவில் உள்ள அனைவருக்கும் .
வாரியார் தன்னுடைய கருத்துக்களை முழுமையாக எடுத்துரைப்பார். இறைபக்தியை நம் மனதில் தூண்ட வைப்பார். வேலூரில் ஒரு திருமணத்திற்காக சென்றபோது காங்கேயநல்லூர் வாரியாரின் இடத்தை பார்க்க வேண்டும் என்று ஆர்வப்பட்டு இடம் தெரியாமல் தட்டு தடுமாறி ஆட்டோவில் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால் 64 ஆம் நாயன்மார் என்று எல்லோராலும் போற்றப்படும் வாரியாரின் இருப்பிடத்தில் நாம் வந்து பார்க்கிறோம். அவ்வளவு பெருமை கொண்டோம்.
பூமிக்கு வந்த ஆன்மீகக் குழந்தை
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஆன்மீக பெரியவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள். அந்த விதத்தில் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி இம்மண்ணில் திருமுருக கிருபானந்த வாரியார் என்னும் ஆன்மீக குழந்தை இந்த பூமியில் அவதரித்தது. இலக்கியமாக இருக்கட்டும், சமயமாக இருக்கட்டும், இசையாக இருக்கட்டும், எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவராக தனக்கென்று தனி பாணியை வைத்திருந்தவர்தான் வாரியார் சுவாமிகள் அவர்கள். திருப்புகழ் ஜோதி என்று எல்லோராலும் புகழப்பட்டவர், பாராட்டப்பட்டவர். ஆன்மீக சொற்பொழிவாற்றுவதில் தனக்கென்று தனி இடத்தை கொண்டவர்
எங்கள் திருவண்ணாமலையில் பாணி பாத்திர தேவர் மடத்தில் சிவலிங்கத் தருணம் செய்விக்கப்பட்டவர் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் . தன்னுடைய அப்பாவிடமே கல்வி இசை இலக்கிய இலக்கணங்களை கற்றுக் கொண்டார் தன்னுடைய சிறிய வயதில் பண்களை எல்லாம் தவறின்றி திருத்தமாக பாடும் வல்லமை பெற்றிருந்தார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெண்பாக்களை இயற்றியுள்ளார். சென்னை பிரம்மஸ்ரீ வரதாசாரியிடம் வினை பயிற்சி பெற்ற இசைப்புலமை கொண்டவர். தன்னுடைய சங்கீத ஞானத்தை சொற்பொழிவாற்றும் போது பயன்படுத்தும் திறமை கொண்டவர் திருப்புகழ் தேவாரம் திருவாசகம் போன்ற பாடல்களை இன்னிசை உடன் பாடியவர் பாடும் திறமை கொண்டவர்.
தன் தந்தையைப் போன்றே வாரியார் சுவாமிகளும் தன்னுடைய சிறிய வயதிலிருந்து சொற்பொழிவு செய்யும் திறமையை கையாண்டார் தனியாகவே புராண பிரசங்கங்களை செய்ய தொடங்கினார் அவருடைய பேச்சுக்கள் எல்லாமே பாமர மக்களும் உணரும் வகையில் அவ்வளவு எளிமையாகவும் இறை பக்தியை ஊட்டுவதாகவும் நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும் இருக்கும். வாரியாரின் சொற்பொழிவை குழந்தைகளும் கேட்கலாம். பெரியோர்களும் கேட்கலாம் அறிவார்ந்த ஞானிகளும் கேட்கலாம் அனைவருக்கும் புரியும் வகையில் அவருடைய சொற்பொழிவு செய்திகள் வாழ்க்கை நடைமுறையில் பயன்படுத்தப்படும் சிறுகதைகள் பாடல்கள் செயல்முறைகள் இவற்றை சார்ந்தே இருக்கும் என்றால் அதுதான் அவரின் சொற்பொழிவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
வடலூருக்கு சென்றபோது திருப்புகழுக்கு பத்திரிக்கை வெளியிடும் சிறப்பை தொடங்கி வைத்தார். 37 ஆண்டுகள் திருப்புகழ் அமிர்தம் என்ற பெயருடன் திங்கள் இதழாக அந்த இதழ் வெளிவந்தது ஒவ்வொரு மாதமும் திருப்புகழுக்கு விளக்க உரைகளும் கந்தர் அலங்கார உரையும் கற்பு நெறி கதைகளும் கட்டுரைகளும் என தொடர்ந்து வந்தன. மக்கள் எல்லோரும் தன்னுடைய கருத்துக்களை காலம் கடந்தும் படிக்க வேண்டும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நூல் எழுதும் செயல்பாட்டை தொடங்கினார் . 500க்கும் மேற்பட்ட ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார் .
அடுத்த தலைமுறைக்கு எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக தாத்தா சொன்ன குட்டி கதைகள் என்ற நூலை வாரியார் சுவாமிகள் எழுதி வெளியிட்டார். அதுபோல பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதி வெளியிட்டார் . இந்திய அரசு அவரின் சிறப்பை போற்றும் வகையில் அஞ்சல் தலை வெளியிட்டு வாரியாரை கௌரவப்படுத்தியுள்ளது . தமிழக இசை சங்கம் இசை பேரறிஞர் என்னும் மாபெரும் விருதை 1967ஆம் ஆண்டு வாரியார் சுவாமிக்கு வழங்கி அவரின் இசைக்கும் அவருடைய சொற்பொழிவிற்கும் மகுடம் சூட்டியது.
தன்னுடைய அயல்நாட்டு பயணத்தில் உடல் நலக்குறைவால் நாடு திரும்ப எண்ணி இந்தியாவின் தமிழகத்தில் வரும் போது திருத்தணி வழியாக வானூர்தி சென்ற போது அவரின் ஆன்மா முருகனின் நிழலில் இளைப்பாற விண்ணுலகம் சென்றது. 87 வயது வரை தன்னுடைய ஆன்மீகப் பணியை இடைவிடாது பக்தர்களிடம் இறை நம்பிக்கையும் ஆன்மீகத்தின் சிறப்புகளையும் எடுத்துரைத்த பெருமை நம்முடைய வாரியார் அவர்களுக்கு மட்டுமே உண்டு.
எத்தனை ஆன்மீக சொற்பொழிவாளர்கள் வந்தாலும் திருமுருக கிருபானந்த வாரியார் என் இடத்தை நிரப்ப யாரும் கிடையாது இனிமேலும் வரவும் முடியாது அதுவே வாரியார் சுவாமிகளின் தனிப் பெருமை என்று நாம் சொல்லலாம். ஆன்மீகம் என்பது மக்களுடைய உள்ளத்திலும் மன எண்ணத்திலும் நிறைந்திருக்க வேண்டும் ஆன்மீகத்தால் மட்டுமே ஒரு சமூகம் ஒழுக்கத்தை கற்க முடியும் என்பதையும் இறைவனின் அத்தனை பாடல்களையும் தன்னுடைய குரல் மூலமாக சொற்பொழிவாக இந்த உலகத்தின் அனைத்து மூலைகளிளும் எதிரொலிக்கும்படி தன்னுடைய குரல் வளர்த்தால் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று சொல்லும் சிறப்பால் முருக பெருமானின் இன்னொரு அவதாரமாகவே மக்களால் பார்க்கப்படும் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் னைவு நாளில் அவரைப்பற்றி எழுதுவதிலும் அவரைப் பற்றி பேசுவதிலும் இறைவனின் கருணையால் மட்டுமே இது முடியும் என்பதை உணர்ந்து இதை எழுதி நிறைவு செய்கிறேன்
வாரியார் சுவாமிகளின் அன்பால் சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் ஐயா அவர்கள் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் என்ற பெயரில் காங்கேயநல்லூரில் கோவிலை நிறுவி இன்றும் அவருக்கு தினமும் பூஜைகள் மக்கள் வெள்ளம் வந்து வணங்கி செல்லும் சிறப்பு பெற்ற இடமாக இருக்கிறது. அவருடைய நினைவு நாள் பிறந்தநாள் லட்ச்சதீபம் என நிறைய நிகழ்வுகள் வாரியார் சுவாமிகளின் சிறப்புகளாக அங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அரசும் அவருடைய பிறந்த நாளை விழாவாக கொண்டாட அறிவிப்பு வெளியிட்டு சிறப்பாக நடைபெறுகிறது.
ஒரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஆன்மீக பெரியோர்கள் தோன்றுவார்கள் அந்த வகையில் என்னுடைய காலகட்டத்தில் நான் குழந்தை முதல் வளர்ந்து பார்த்தவரை திருமுருக கிருபானந்த வாரியார் ஆன்மீக பெரியோராக அறிமுகமாகி அவருடைய சொற்பொழிவுகளை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி எங்களுடைய தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச்சங்கம் திருவண்ணாமலை குழுமத்தின் உறவாக வாரியார் அவர்களின் பேத்தி மணிமொழி அவர்கள் இணைந்த காரணத்தால் அவர்கள் மூலமாக அவருடைய உறவுகள் அனைவரும் அறிமுகமான திருநாளில் மகிழ்கினாறோம்
ஒவ்வொரு தலைசிறந்தவர்களின் வாரிசுகள் அதுபோலவே அவர்களின் செயல்பாடுகளையும் கொண்டு செல்வார்கள் நற்பெயரை நிலை நாட்டுவார்கள் என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் அவருடைய தலைமுறை வாரியார் என் பெருமையைக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது அதில் ஒரு துளியாக எங்கள் குழுவில் வாரியார் அவர்களின் பாடத்திட்டமாக ஒரு வருடம் கொண்டு சென்று மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணியை இணைந்து செய்து கொண்டிருக்கிறோம் இந்த பணியை செய்ய பணித்த இறைவனுக்கு நன்றியை தெரிவித்து நம்முடைய எல்லோர் மனங்களிலும் நிறைந்திருக்கும் திருமுருக கிருபானந்த வாரியாரை வணங்கி இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
கட்டுரையாளர்:
கு. ரத்னா செந்தில்குமார், தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு தமிழ்ச்சங்கம்
மற்றும்
மை பாரத் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்
இயக்குனர்
திருவண்ணாமலை