கந்த சஷ்டி சிறப்புகள்: சூரசம்ஹாரம் முடிந்த பிறகு திருச்செந்தூரில் நடக்கும் "சாயா அபிஷேகம்" மற்றும் கந்த சஷ்டி விரதத்தின் ஏழாம் நாள் நடக்கும் முருகன் திருக்கல்யாணம் பற்றிய சிறு தகவல்களை பார்ப்போம் ...
சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் சூரபத்மனை எதிர்த்து செந்தில் ஆண்டவர் போர் புரிந்த போது சூரனின் மாயாஜாலங்களை கண்டு மிகுந்த கோபம் அடைந்தார். சூரபத்மன் வெவ்வேறு உருவங்களில் முருகப் பெருமானை ஏமாற்றி தப்பிப்பதற்காக கடலுக்கு அடியில் மாமரமாக ஒளிந்து கொள்வான். முருகப்பெருமான் தன்னுடைய அன்னையிடமிருந்து பெற்ற சக்தி வேலை எய்தி மாமரத்தை இரண்டாகப் பிளந்து சூர பத்மனை ஆட்கொண்டு இரண்டு பாகம் ஆக்கி, ஒரு பாகம் சேவ லாகவும், மற்றொன்று மயிலாகவும், உருவாக்கி,சேவலை தனது கொடியிலும், மயிலை தனது வாகனமாகவும் முருகர் வைத்துக் கொள்ளும் சூரசம்ஹார நிகழ்வு நேற்று திருச்செந்தூரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு களித்தனர். 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற கோஷம் விண்ணை தொடும் அளவுக்கு ஒலித்தது.. இதேபோல் பிற அறுபடை வீடு தலங்களான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹாரம் விமர்சையாக நடைபெற்றது. சூரபத்மனை வதம் செய்த சுப்ரமணியர் திருத்தணி மலையில் சினம் தணிந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக சூரசம்ஹாரம் திருவிழா திருத்தணியில் நடைபெறுவது இல்லை. மேலும் இங்கு உற்சவர் சண்முகப் பெருமானின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
திருச்செந்தூரில் போர் முடிந்த பிறகு செந்தில் ஆண்டவர் உலா வந்து திருக்கோவில் பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதிக்கு முன்பு எழுந்தருள்வார். மகாதேவர் சன்னதியில் முருகப்பெருமான் எழுந்தருளும் இடத்திற்கு எதிரே மிகப்பெரிய கண்ணாடி ஒன்று வைக்கப்படும்.போர் புரிந்த ஜெயந்தி நாதரின் உருவம் அந்த கண்ணாடியில் தெரியும். கண்ணாடியில் பிரதிபலிக்கும் ஜெயந்தி நாதருக்கு அவர் குளிர குளிர அபிஷேகம் நடக்கும். கண்ணாடி பிம்பத்துக்கு நடக்கும் அபிஷேகம் என்பதால் இதனை "சாயா அபிஷேகம்" என்று கூறுவார்கள். இந்த அபிஷேகம் கண்டு முருகப் பெருமான் தன் கோபம் குறைவதை கண்ணாடியில் பார்த்து மகிழ்வார். இந்தச் சாயா அபிஷேகம் திருச்செந்தூரில் மட்டுமே நடைபெறும்.இது ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் விசேஷமான அபிஷேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முருகன் திருக்கல்யாணம்:

கந்த சஷ்டி விரதத்தில் நிறைவாக சூரசம்ஹாரத்திற்கு பிறகு நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வு "முருகனின் திருக்கல்யாணம்" ஆகும்.
இத்திருமணம் பெரும்பாலும் நள்ளிரவில் நடைபெறும்.ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாள் முருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இந்திரன் தன் மகள் தெய்வானையை, சூரபத்மனை முருகன் வென்ற பிறகு,மகிழ்ந்து முருகனுக்கு திருமணம் செய்து கொடுத்த நிகழ்வே முருகன் திருக்கல்யாணம் ஆகும்.
இந்த நிகழ்வு திருப்பரங்குன்றம் மற்றும் திருச்செந்தூர் போன்ற முருகனின் தலங்களில் சிறப்பாக நடைபெறுகிறது
. முன்னதாக தெய்வானை தபசு மண்டபம் சென்று முருகனை திருமணம்புரிய வேண்டி தவமிருக்கும்
வைபவம்,நிச்சயதார்த்த வைபவம் நடக்கும். நள்ளிரவில் திருக்கல்யாணம் நடைபெறும். முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடைபெறுகிறது. மறுநாள் சுவாமி தெய்வானையுடன் வீதியுள்ள செல்கிறார். அடுத்த மூன்று நாட்களும் சுவாமி திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சலில் காட்சி தருவார்.
ஆறு நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள், முருகப்பெருமான் திருக்கல்யாணம் தரிசித்த பிறகு தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இவ்வாறு தெய்வத்திருமணங்களை கண்டு வழிபடுவதனால் திருமண தடைகள் விலகும் என்றும்,திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகி நல்வாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம். இதன் காரணமாக கோவில்களில் நடைபெறும் தெய்வீக திருமணங்களை பக்தர்கள் கண் குளிர தரிசனம் செய்கின்றனர்.
மேலும் இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தங்கம் நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ. 1,200 குறைவு!
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
மக்களே உஷார்...இன்று இரவு கரையை கடக்கிறது மோன்தா புயல்
திருச்செந்தூரில் நடைபெறும் சாயா அபிஷேகம் பற்றி தெரியுமா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 28, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிகள்
தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!
{{comments.comment}}