ஒரு சிறிய பள்ளியின் பெரிய சிறகுகள்!
Nov 28, 2026,04:29 PM IST
- வ.துர்காதேவி
ஓர் ஆசிரியரின் அர்ப்பணிப்பும், இரு மாணவிகளின் சாதனைப் பயணமும்...!
சில பொறுப்புகள்
நம் விருப்பத்தைக் கேட்டுக்கொண்டு வருவதில்லை.
எதிர்பாராத ஒரு நாளில்,
கதவைத் தட்டாமல் உள்ளே நுழைந்து,
தோள்களில் அமர்ந்துகொள்கின்றன.
அப்படித்தான் வந்தது
எனக்கான பொறுப்புத் தலைமை ஆசிரியர் பணி.
பதவியின் பெயரிலேயே
பொறுப்பு இருக்கும்போது,
அதை ஏற்றுக்கொண்ட பிறகு கூடுதல்
பொறுப்பில்லாமல் இருக்க முடியுமா?
ஏற்றுக்கொண்டேன்.
புதிய அனுபவங்களோடும்,
புதிய சவால்களோடும்.
மின்னஞ்சல்கள்...
அவற்றுக்கான பதில்கள்...
காலக்கெடுக்கள்...
தினம் ஒரு புதிய அறிவுறுத்தல்...
அலுவலகப் பணிகள்
ஒருபுறம் அணிவகுத்து நிற்க,
அவற்றையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு,
எந்தப் பணியை எப்போது முடிக்க வேண்டும் என்று
வரிசையாகவும் நேர்த்தியாகவும் முடிக்கும்
அனுபவம் வாய்ந்த ஓர் அலுவலகப் பணியாளர்
எனக்குப் பக்கபலமாக இருந்தார்.
அவரது திட்டமிடல்
எனது பணிச்சுமையில்
சில பக்கங்களைக் குறைத்தது.
அவரது பங்களிப்பிற்கு
ஒரு சிறிய நன்றியுடன்
அந்தப் பக்கத்தை இங்கே முடித்துக்கொள்கிறேன்.
ஏனெனில்,
அடுத்து வரப்போவது
அறிவியல் சார்ந்த ஒரு பெரிய கதை!
சிட்டுக்குருவி நாள்,
புவி நாள் etc.,
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, போதை இல்லா சமூகம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு etc.,
கலை நிகழ்ச்சிகள்,
விளையாட்டுப் போட்டிகள்,
மன்றச் செயல்பாடுகள் etc etc etc....
ஆண்டின் 365 நாட்களுக்கும்
ஏதாவது ஒரு நிகழ்ச்சி காத்திருக்க,
பூமி என்னை சுத்துதே என பாடிக்கொண்டே நாங்களும் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தோம்.
அப்படியொரு பரபரப்பான நாளில்,
எங்கள் பள்ளியிலிருந்து
நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு பள்ளியில்
நடைபெறும் மாவட்ட அறிவியல் கண்காட்சிக்கு
ஓர் ஆசிரியரையும்
மூன்று மாணவர்களையும்
அனுப்பி வைக்க வேண்டும்
என்றொரு மின்னஞ்சல் வந்தது.
பெண் பிள்ளைகளை
வேறு ஊருக்கெல்லாம் அனுப்ப மாட்டோம் எனும் பெற்றோர்கள் இந்த 21ம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
போட்டியின் முக்கியத்துவத்தை விளக்கி,
பெற்றோரின் அனுமதியைப் பெறுவது
ஒரு சவால் என்றால்,
அவர்களுடன் செல்ல
ஓர் ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது
அடுத்த சவால்.
பள்ளி வேலை நாளில்
ஓர் ஆசிரியரை வெளியே அனுப்பினால்,
அவர் வகுப்பில் கவனிக்க வேண்டிய
முப்பது, நாற்பது குழந்தைகளின் நிலை? ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு ஆசிரியரையோ இரண்டு ஆசிரியரையோ அனுப்பினால் அவர்கள் செல்லும் பாடவேளைகளுக்கு யாரை மாற்றி அனுப்புவது என்பதெல்லாம் நாங்கள் நித்தமும் சந்திக்கும் சவால்கள்.
அதுவும்,
உயர்கல்வி வழிகாட்டி,
சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாளர்,
SCOUT ஆசிரியர்,
இன்னும் சில பொறுப்புகளையும்
தன் தோள்களில் சுமந்துகொண்டிருக்கும்
எங்கள் அறிவியல் ஆசிரியரிடம்
இன்னொரு பொறுப்பை எப்படிக் கொடுப்பது?
சிறு தயக்கத்தோடு அழைத்தேன் , எதற்கும் OK என கூறும் KK (காளிதாஸ்) என்னும் எங்கள் அறிவியல் ஆசிரியரை.
'உங்களுக்கு விருப்பமிருந்தால்
மாணவர்களை அழைத்துச் செல்லுங்கள்.
இல்லையென்றாலும் பரவாயில்லை.
கட்டாயமெல்லாம் இல்லை.
அரையாண்டுத் தேர்வும் நெருங்குகிறது.
மாணவர்களைத் தயார்படுத்த வேண்டியிருக்கிறது.
நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்.' என்றேன்.
ஆனால் அவரது பதில்
எனது தயக்கத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது.
"நான் அழைத்துச் செல்கிறேன் மேடம்.
மாணவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்க வேண்டும்.
பல்வேறு படைப்புகளை அறிய வேண்டும்.
அதுதான் அவர்களுக்குப் புதிய கற்றல் அனுபவங்களைத் தரும்."
அந்தப் பதிலில்
ஒரு ஆசிரியரின் விருப்பம் மட்டுமல்ல,
மாணவர்களின் எதிர்காலம் குறித்த
அக்கறையும் ஒலித்தது.
பிறகென்ன??!!! இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தேன்.
இங்கே,
எங்கள் அறிவியல் ஆசிரியரைப் பற்றி
சில வரிகள் சொல்லாமல்
கதையைத் தொடர்வது நியாயமல்ல.
ட்ரெய்லர் அளவிற்கு இல்லாவிட்டாலும்,
ஒரு டீசராவது அவசியம்!
பதினைந்து ஆண்டுகால
எனது ஆசிரியர் பயணத்தில்
பல சிறந்த ஆசிரியர்களைக் கடந்திருக்கிறேன்.
அவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் இவர்.
ஆசிரியர் பணியை
ஒரு வேலை நேரத்திற்குள் அடைத்துவிடாமல்,
அதையே தனது வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்.
அறிவியல் தகவல்களைத் தேடுவதில்
அவருக்கு ஓய்வில்லை.
கண்டுபிடிப்புகளின் பின்னணியையும்,
அவற்றுக்குக் காரணமான நிகழ்வுகளையும்
ஆழமாக அறிந்துகொள்வதில்
அலாதியான ஆர்வம்.
கற்ற அறிவை
தன்னுடைய குறிப்பேட்டுக்குள் பூட்டிவைக்காமல்,
மாணவர்களின் மனங்களிலும்
விதைக்க வேண்டும் என்ற வேட்கை.
அருகிலுள்ள வகுப்பறையிலிருந்து
அவர் நடத்தும் பாடங்களைக்
கேட்கும் வாய்ப்பு எனக்கும் சில நேரம் கிடைத்ததுண்டு.
பாடப்பொருளில் ஆழமான அறிவு,
அதை மாணவர்களுக்குப் புரியவைக்க
அளவற்ற ஆர்வம்.
அவரது கற்பித்தலில் இவை
இரண்டுமே ஒன்றாகப் பயணிக்கும்.
விவசாயத்தின் மீது கொண்ட பற்றால்,
மண்ணின் மகத்துவத்தையும்,
இயற்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும்,
எதிர்காலத் தலைமுறையின் உணவுப் பாதுகாப்பையும்
அறிவியலோடு இணைத்துக் கற்பிப்பவர்.
அறிவியல் என்பது
பாடப்புத்தகத்தின் பக்கங்களில் மட்டுமல்ல,
நாம் வாழும் மண்ணிலும்,
உண்ணும் உணவிலும்,
சுவாசிக்கும் காற்றிலும் இருக்கிறது
என்பதை உணர்த்துபவர்.
சரி,
டீசர் இத்துடன் முடிந்தது.
இனி கதைக்குள் நுழைவோம்!
இந்த மாவட்டப் போட்டிக்கான அழைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே,
அறிவியல் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே உருவாக்கும் முயற்சியாக
ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை
மாணவர்களைக் கொண்டே உருவாக்கியிருந்தார்.
பள்ளியிலேயே
ஓர் அறிவியல் கண்காட்சியையும் சிறப்பாக நடத்தி முடித்திருந்தார்.
அதன் விளைவாக
எங்கள் பள்ளியிலும் எடிசன்களும், நியூட்டன்களும், மேரி கியூரிகளும் ஆங்காங்கே முளைத்திருந்தனர்!
மாவட்ட அளவில் நடைபெறவிருந்த அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல
ரித்திகா, ஜனனி என்ற
இரு மாணவிகளைத் தேர்ந்தெடுத்தார்.
எப்போதும் இணைபிரியாமல்
ஜோடிப் புறாக்களாக வலம் வரும் இருவரும்
அறிவியல் மேடையிலும்
இணைந்து சிறகடிக்கத் தயாரானார்கள்.
மாணவர்களைத் தேர்ந்தெடுத்ததிலேயே
தாம் பாதி வென்றுவிட்டதாக
பின்னர் ஆசிரியர் கூறியபோது,
அவரது தேர்வின் மீதான நம்பிக்கை
எனக்குப் புரிந்தது.
மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகள்,
பலவிதமான அறிவியல் படைப்புகள்,
புதிய சிந்தனைகள்,
புதிய முயற்சிகள்...
அவற்றின் நடுவே
எங்கள் கிராமத்துப் பள்ளியின்
இரு மாணவிகளும்
தங்கள் படைப்புகளைத் தன்னம்பிக்கையுடன்
விளக்கிக் கொண்டிருந்தனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
கண்காட்சியைப் பார்வையிட்டு,
மாணவிகளிடம் அவர்களின் படைப்புகளை குறித்த விளக்கத்தைக் கேட்டு , மேலும் சிறப்பாக செய்யுமாறு கூறி ஊக்கப்படுத்தினார்.
அந்தச் சில நிமிடங்கள்
அவர்களுக்குள் விதைத்த தன்னம்பிக்கை
எத்தனை பெரியது!
மாலை வந்தது.
ஆசிரியரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பும் வந்தது..
அவரது குரலிலேயே
ஏதோ நல்ல செய்தி
ஒளிந்திருப்பதை உணர முடிந்தது.
மறுநாள் அறிவிப்பு வந்தது.
மாவட்ட அளவில் முதலிடம்!
மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு!
எங்கள் பள்ளி இதுவரை
எட்டிப் பார்க்காத உயரம் அது
.
உலகில் ஏழல்ல அதிசயங்கள் ,வாய் பேசும் பூவே நீ எட்டாவது அதிசயமே என்ற பட்டியலில் ஒன்பதாவதாக இதுவும் இணைந்தது எங்கள் ஒன்பதாம் வகுப்பு மாணவிகளால்.
ஒரு சிறிய கிராமத்திலிருந்து
மாநில அளவிலான போட்டிக்கு
எங்கள் பள்ளியின் பெயர் சென்றடைந்ததே
ஒரு பெருமையான தருணம்.
ஆனால்,
அது முடிவல்ல.
அடுத்த அத்தியாயத்தின் தொடக்கம்!
மாநில அளவிலான போட்டிக்கான
ஆயத்தங்கள் தொடங்கின.
எங்கள் பள்ளி அமைந்திருப்பது
ஒரு சிறிய கிராமத்தில்.
அறிவியல் படைப்புக்குத் தேவையான
சில பொருட்களைக்கூட
பத்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள
ஒரு சிறிய நகரத்திற்குச் சென்றுதான்
வாங்க வேண்டும்.
ஒவ்வொன்றயும் தேடித்தேடி
வாங்க வேண்டும்.
வடிவமைக்க வேண்டும்.
மீண்டும் மாற்ற வேண்டும்.
மெருகேற்ற வேண்டும்.
ஒவ்வொரு பொருளின் பின்னாலும்
ஒரு தேடல்.
ஒவ்வொரு மாற்றத்தின் பின்னாலும்
ஒரு சிந்தனை.
ஒவ்வொரு முன்னேற்றத்தின் பின்னாலும்
ஒரு ஆசிரியரின் உழைப்பு.
அறிவியல் ஆசிரியரின் சிந்தனைகளுக்குச்
செயல்வடிவம் கொடுப்பதில்,
எங்கள் ஓவிய ஆசிரியரும்
தனது பங்களிப்பை வழங்கினார்.
படைப்பின் தோற்றத்திற்கும் வடிவமைப்பிற்கும்
அழகும் நேர்த்தியும் சேர்த்து,
இந்தக் கூட்டு முயற்சியில்
தனக்கான தடத்தையும் பதித்தார்.
அறிவியல் ஆசிரியரின் சிந்தனை,
ஓவிய ஆசிரியரின் கைவண்ணம்,
மாணவிகளின் ஆர்வம்...
மூன்றும் ஒன்றிணைந்து
அந்தப் படைப்புக்குப் புதிய வடிவம் கொடுத்தன.
ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த உழைப்பும்,
மாணவிகளின் விடாமுயற்சியும் இணைந்து
படைப்பை முழுமையாக்கின.
வெற்றி பெறும் முன் வீண்முயற்சி என்பார்கள்; வெற்றி பெற்ற பின் விடா முயற்சி என்பார்கள்.
எப்போதோ எங்கோ படித்த
ஆட்டோவின் பின்புறம் எழுதப்பட்ட வாசகங்கள்
எல்லாம் மனதில் மின்னல் போல வந்து சென்றன எனக்கு.
ஆசிரியர் சொன்னதைப் புரிந்துகொண்டு,
தங்கள் படைப்பைச் செம்மைப்படுத்திய
அந்த இரு மாணவிகளின் முயற்சியும்
பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மாநிலப் போட்டிக்குப் புறப்படும் முன்தினம்
இரு மாணவிகளையும் அழைத்து,
என்னுடைய வாழ்த்துகளைச் சொல்லி,
"கப்பு முக்கியம் பிகிலு!" என்றேன்.
( நிற்க! இதில் வெற்றி பெற்றால் கப் எல்லாம் தர மாட்டார்கள் என எனக்கு அப்போது தெரியாதே!)
அருகிலுள்ள மாவட்டத்தில்
மாநில அளவிலான போட்டி.
அறிவியல் படைப்பின் பாதுகாப்பையும்,
பயணத்தின் வசதியையும் கருத்தில் கொண்டு
பேருந்துக்குப் பதிலாக
ஆட்டோவில் செல்ல முடிவெடுத்திருந்தனர்.
ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும் என வெண்கலக் குரலோன் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்த அதிகாலையிலேயே
என் அலைபேசி ஒலித்தது.
"மேடம், நாங்கள் கிளம்பிவிட்டோம்!"
மூவரின் குரலிலும்
அத்தனை உற்சாகம்.
அன்றைய காலை,
பள்ளியின் இறைவழிபாட்டுக் கூட்டத்தில்
ஒரு வேண்டுகோள் வைத்தேன்.
"இன்று நம் பள்ளி மாணவிகள்
வெற்றி பெற வேண்டும்.
அவர்களுக்காக அனைவரும்
ஒரு நிமிடம் பிரார்த்திப்போம்."
அந்த ஒரு நிமிடப் பிரார்த்தனையில்
எங்கள் பள்ளியின் நம்பிக்கைகள்
அனைத்தும் ஒன்றாகக் கலந்திருந்தன.
ஒரு சிறிய பள்ளியின் சார்பாக
இரண்டு சிறிய உள்ளங்கள்
ஒரு பெரிய மேடையை நோக்கிச் சென்றிருந்தன.
அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை என் மனதில் சம்மனமிட்டு அமர்ந்திருந்தது.
மாநில அளவிலான அரங்கம்.
பல்வேறு பள்ளிகள்.
பல ஆசிரியர்கள்.
பேராசிரியர்கள்.
புதிய கண்டுபிடிப்புகள்.
பல்வேறு கேள்விகள்.
மாவட்ட ஆட்சியர்
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
எங்கள் மாணவிகளின் படைப்பை
பலரும் பார்வையிட்டனர்.
கேள்விகள் கேட்டனர்.
விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
யார் எத்தனை முறை கேட்டாலும்
சலிப்பின்றி,
பொறுமையுடன்,
தெளிவாகப் பதிலளித்தனர்
எங்கள் ரித்திகாவும் ஜனனியும்.
ஒரு படைப்பை உருவாக்குவது
ஒரு திறமை என்றால்,
அதைப் புரிந்துகொண்டு
மற்றவர்களுக்குப் புரியவைப்பது
அதற்கும் மேலான திறமை.
அந்தத் திறமையை
அவர்கள் அங்கே வெளிப்படுத்தினர்.
இதற்கிடையில்,
மாணவிகள் உணவருந்தும் புகைப்படங்கள்,
அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான தகவல்கள்
என ஆசிரியரிடமிருந்து
தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன.
வெற்றியை நோக்கிய பயணத்தில்
மாணவர்களின் நலனை மறந்துவிடாத
அந்தப் பொறுப்புணர்வு
என்னை மேலும் நெகிழச் செய்தது.
மீண்டும் இன்னொரு மாலை நேரம்.
வீட்டில் விளக்கேற்றிவிட்டு
அமர்ந்திருந்தேன்.
மீண்டும் ஒலித்தது அலைபேசி.
"குட் ஈவினிங் மேடம்!"
அந்தக் குரலில் வழக்கத்தைவிட அதிகமான மகிழ்ச்சி.
ஏதோ நல்ல செய்தி
வந்திருக்கிறது என்பதை
அந்த ஒரு வணக்கமே சொல்லிவிட்டது.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட விதத்தை
அவர் விவரிக்கத் தொடங்கினார்.
பத்தாம் இடம் அறிவிக்கப்பட்டது.
ஒன்பதாம் இடம் அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு அறிவிப்பிலும்
எங்கள் மாவட்டத்தின் பெயரைத் தேடியிருக்கிறார்.
ஐந்தாம் இடம் வரை வந்தும்
எங்கள் பெயர் இல்லை.
மூன்றாம் இடமும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
இன்னும் பெயர் வரவில்லையே!
அவரது குரலில்
பதற்றம் கலந்த எதிர்பார்ப்பு.
அடுத்த நொடி...
திருவண்ணாமலை மாவட்டம்,
அரசு உயர்நிலைப்பள்ளி, நெசல் —
மாநில அளவில் இரண்டாம் இடம்!
அந்த அறிவிப்பைக் கேட்டபோது
எங்கள் பள்ளியின் பெயர் மட்டுமல்ல,
எத்தனையோ நாட்களாகச் சிந்திய உழைப்பும்,
தூக்கமின்றிக் கழிந்த இரவுகளும்,
மாணவிகளின் விடாமுயற்சியும்
ஒரே நேரத்தில் வெற்றி பெற்றதாக உணர்ந்தேன்.
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்..
எவ்வளவு உண்மையான வரிகள்!!
ஒரு சிறிய கிராமத்திலிருந்து சென்ற
எங்கள் இரு மாணவிகள்,
பல தனியார் பள்ளிகளும் பங்கேற்ற
மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில்
இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தனர்!
அது வெறும் பரிசல்ல.
ஒரு அறிவியல் ஆசிரியரின்
அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்.
இரு மாணவிகளின் தேடலுக்கும்,
திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம்.
ஒரு கிராமத்துப் பள்ளியின்
கனவுகளுக்குக் கிடைத்த சிறகுகள்!
இப்போது,
அந்த இரு மாணவிகளும்
தங்கள் வழிகாட்டி ஆசிரியருடன்( நம்ம KK தான்)
தென்னிந்திய அளவிலான போட்டியை நோக்கிப்
பயணிக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.
எங்கள் பள்ளி இதுவரை
கண்டிராத புதிய சாதனைப் பாதை
இப்போது திறந்திருக்கிறது.
ஒரு மின்னஞ்சலுக்குப் பதிலளிக்கக்கூட
நேரம் தேடிக்கொண்டிருந்த
அந்தப் பரபரப்பான நாட்களில்,
இந்த ஒரு மின்னஞ்சல்
எங்களுக்கு இத்தனை மகிழ்ச்சியையும், எங்கள் பள்ளிக்கும் , எங்கள் மாவட்டத்திற்கும் இவ்வளவு பெருமையையும் தரும்
என்று அப்போது கற்பனை கூட செய்யவில்லை.
சில நேரங்களில்,
நம் அன்றாடப் பணிகளின் நடுவே
வந்து சேரும் ஒரு சிறிய வாய்ப்பு
ஒரு பெரிய வரலாற்றின் தொடக்கமாகிவிடுகிறது.
ஒரு ஆசிரியர்
தனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்தை மட்டும்
கற்பிப்பவராக இருந்தால்,
அவர் ஒரு வகுப்பறையை உருவாக்குகிறார்.
ஆனால்,
தனது மாணவர்களின் திறமைகளைத் தேடி,
அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கி,
அவர்கள் செல்லும் பாதையில்
தானும் உடன் நடப்பவராக இருந்தால்,
அவர் எதிர்காலத்தையே உருவாக்குகிறார்.
அன்றைய தினம்
எனக்குப் புரிந்த உண்மை இதுதான்:
ஒரு பள்ளியின் பெருமை
அதன் கட்டடங்களின் உயரத்தில் இல்லை;
அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின்
அர்ப்பணிப்பின் ஆழத்தில்தான் இருக்கிறது.
மாணவர்களின் கனவுகளுக்கு
சிறகுகளைக் கொடுக்கும் ஆசிரியர்கள் இருக்கும் வரை,
கிராமங்களின் எல்லைகள்
அவர்களின் சாதனைகளுக்கு
எல்லைகளாக இருக்க முடியாது.
சிறிய பள்ளிகள்
சிறிய கனவுகளின் முகவரிகள் அல்ல!
அவை பெரிய சாதனைகள்
பிறப்பெடுக்கும் இடங்கள்!
ஒரு அறிவியல் ஆசிரியரின் அர்ப்பணிப்பு,
இரு மாணவிகளின் விடாமுயற்சி,
ஒரு பள்ளியின் நம்பிக்கை...
இவை ஒன்றாகச் சேர்ந்தால்,
சிறிய பள்ளிகளுக்கும்
பெரிய சிறகுகள் முளைக்கும்!
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே..( அதானே, இளையராஜா இல்லாமல் எப்படி ஒரு கதையை முடிக்க முடியும்)
வெற்றிகள் தொடரட்டும்.
கனவுகள் சிறகடிக்கட்டும்!