அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை தீப திருநாள்.. திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் ஜரூர்

Su.tha Arivalagan
Nov 20, 2025,04:58 PM IST

- அ.சீ. லாவண்யா


திருவண்ணாமலை: வரவிருக்கும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் இந்த ஆண்டு திருவிழாவிற்கு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணிகளை வேகப்படுத்தியுள்ளன.


பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் போக்குவரத்து வசதிகளை கூடுதல் அளவில் ஏற்பாடு செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்தம் 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


இந்த பேருந்துகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து நேரடியாக திருவண்ணாமலைக்கு இயக்கப்பட உள்ளன. பக்தர்கள் சிரமமில்லாமல் பயணம் செய்ய பேருந்துகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து வசதியுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் திட்டங்கள், மருத்துவ அவசர உதவி மையங்கள் ஆகியவை பெரிதும் வலுப்படுத்தப்பட உள்ளன. நகரின் முக்கிய சாலைகளில் கூடுதல் போலீஸ் படை நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.




மேலும், தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதை கட்டுப்பாடுகள் மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவையான வழிகாட்டி பலகைகள் ஆகியவை அமைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. நகரத்தின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்படுகின்றன.


இந்த ஆண்டும் திருவிழாவிற்கு மிகப்பெரிய அளவில் பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அனைத்து பணிகளும் திறம்பட நடைபெற அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். திருவண்ணாமலை முழுவதும் பண்டிகை சூழல் நிலவுகிறது.


கார்த்திகை திருநாள் நாளில் ஜோதி வடிவில் நம்மை மகிழ்விக்கும் நன் நாளை ஒளிமிக்க நாளாய் மாற்றுவோம் அண்ணாமலையார் அருள் பெறுவோம், வாழ்க்கையை ஒளிமயமாய் மாற்றுவோம்.


(அ.சீ.லாவண்யா, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்தமிழ் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார்)