திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் .. மாலையில் மகா தீபம்.. பக்தர்கள் குவிந்தனர்

Swarnalakshmi
Dec 03, 2025,10:49 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


2025 டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி புதன்கிழமை கார்த்திகை 17ஆம் நாள் "மகா திருக்கார்த்திகை தீபம்" அனுஷ்டிக்கப்படுகிறது.


உலகப் புகழ் பெற்ற பத்து நாட்கள் விழாவாக திருவண்ணாமலையில்  கொண்டாடப்படும் திருக்கார்த்திகை தீபம் திருவிழாவை "கார்த்திகை பிரம்மோற்சவம்" என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருநாள் கொடியேற்றத்துடன்

 24. 11. 20 25 அன்று துவங்கி பத்தாம் நாளான( 03.12.2025) இன்று "மகாதீபம் "மாலை ஆறு மணிக்கு  திருவண்ணாமலை உச்சியில் ஏற்றப்படுகிறது.


அதற்கு முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை கோவிலில் "பரணி தீபம் " ஏற்றப்பட்டது. (பரணி தீபத் திருவிழா). இதனைத் தொடர்ந்து இன்று மதியம் ஸ்ரீ சுப்பிரமணியர் பிரம்ம தீர்த்த குளம், தீர்த்தவாரி விழா, மாலை 6 மணிக்கு மலை உச்சியில் (மகா ஜோதி தரிசனம்) மகாதீபம் ஏற்றப்படுகிறது.




அருணாச்சலேஸ்வரர் மலை உச்சியில் அக்னி வடிவில் காட்சியளித்து எல்லாம் வல்ல பரம்பொருள் பக்தர்கள் அனைவருக்கும் அருளாசி புரிவார். இந்த பிரம்மாண்டமான மகா ஜோதியை காண திருவண்ணாமலையில் மக்கள் திரளாக குவிந்த வண்ணம் உள்ளனர்.


இன்று இரவு கொடி மரத்தில் உள்ள கொடி இறக்கப்பட்டு இரவு விழா தங்கத்தால் ஆன ரிஷப வாகனத்தில் பெரியநாயகர் ஊர்வலம் சிறப்பாக நடைபெறும். இது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மிக அற்புதமான நிகழ்வு.


திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுபவர்கள் யார்?.. என்று பார்ப்போமா.. 


அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு மட்டுமே உண்டு. இவர்கள் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக இந்த புனிதமான பணியை செய்து வருகின்றனர். பர்வத ராஜகுலத்தினர் பார்வதி தேவி அவதரித்த மரபில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்பவர்கள்.  ஆகையால், இவர்கள் மீனவர்கள் என்றும் செம் படவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


திருவண்ணாமலையில் இன்று மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திற்கான 300 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் 1500 மீட்டர் திரி,4500  கிலோ நெய் ஆகியவையும் மலை மீது நேற்று மாலை கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபத்தை காணவே கண் கோடி வேண்டும். 


புராணக்கதை:


திருவண்ணாமலை தீபத் திருவிழா சிவபெருமான் ஜோதி வடிவமாக மகாவிஷ்ணுவிற்கும், பிரம்மாவிற்கும் காட்சி அளித்த திருநாளாகும்.  அடிமுடி காண முடியாத சிவபெருமான் அண்ணாமலையராக, லிங்கோத்பவ மூர்த்தியாக  வெளிப்பட்டதும் இந்த நாளில் என்னும் பெருமை  தீபத் திருவிழா நாளிற்கு உண்டு. மேலும் சிவபெருமானை எப்பொழுதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்று கிரிவலம் செய்து, தவம் செய்த பார்வதி தேவிக்கு கிரிவலப்பாதையில் எட்டு இடங்களில் ஜோதி வடிவம் உள்ளிட்ட எட்டு விதமான ரூபங்களில் திருக்காட்சி அளித்தார் சிவபெருமான் என்றும், தனது உடலில் சரி பாதியை பார்வதி  தேவிக்கு  அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததும் திருக்கார்த்திகை தீப திருநாளில் என்ற சிறப்பும் இன்று அமைந்துள்ள தீபத் திருநாளுக்கு உண்டு.  


திருவண்ணாமலை கிரிவலம் செய்வதும் முக்தியை தரும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் நாம் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில்/ கைபேசியில்  நேரலை நிகழ்வாக வரும் திருவண்ணாமலை மகா ஜோதியை பார்த்த பிறகு நம் வீடுகளில், வீட்டு வாசலில், பூஜை அறையில், அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றி "அண்ணாமலையாருக்கு அரோகரா!"என்று வழிபாடு செய்வது சிறப்பு. வெல்லப்பாகில் செய்த கார்த்திகை பொறியை நைவேத்தியமாக வைத்து வழிபடுவது சிறப்பு.


இன்று திருவண்ணாமலை மட்டும் இன்றி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மற்றும் முருகன் ஆலயங்களிலும்  கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.