நீட் தேர்வு.. சிறுமியின் கைக்கடிகாரம்.. பால்காரி.. கலையின் 3 கவிதைகள்!

Su.tha Arivalagan
Dec 27, 2025,10:26 AM IST

- தமிழ்மாமணி இரா.கலைச்செல்வி


1. நீட் தேர்வு


நீட்  தேர்வில் தோல்வி.!!

தற்கொலைக்குத் துணிந்தவள் !

போராடி வாழ ஏன் துணியவில்லை.?

மருத்துவர் ஆக  அளவற்ற‌ ஆசை!

மாண்டு போனால்..?

இது வரை  நீ ,

மாங்கு மாங்கு என, 

கற்ற கல்வி,

உழைத்த உழைப்பு, 

இது வரை 

உன்னை வளர்க்க,

உன் அன்னை பட்ட பாடு .

அதற்கு நீ தரும் பரிசு இதுவா..?

மனிதனுக்கு நல் மருத்துவராக ,

வாழ முடியவில்லை எனில் ,

மனிதனுக்கு நல் மனிதனாக 

வாழ்ந்து பார்...




2. சிறுமியின் கைக்கடிகாரம்


கைக்கடிகாரத்தை 

சிறிது சிறிதாய் 

பிய்த்து தின்கிறாள்

பள்ளிக்கூட சிறுமி.

பள்ளி  இடைவேளை முடிந்து, 

மணி அடித்ததும், 

அப்படியே விழுங்கி விட்டாள் 

கடிகாரத்தை. 

ஜவ்வு மிட்டாய் கடிகாரத்தை 

ஜாலியாய் சுவைத்துக் கொண்டே ..

வகுப்பிற்குள் நுழைகிறாள்  

அந்த கிராமத்து சிறுமி.


3. பால்காரி


தன் வீட்டு மாடு

கன்று போட்டு விட்டது. 

அம்மாவிற்கு கொள்ளை மகிழ்ச்சி. 

சிறுமிக்குகோ வருத்தம்.

தெரு முழுவதும் பால் ஊற்றினால்

நல்ல வருமானம் வரும் அம்மாவிற்கு.

மளிகை சாமான் வாங்க ஆகும். 

தூக்கு வாளியை  எடுத்துக்கொண்டு

தெருத்தெருவாய் 

அலைய வேண்டும் சிறுமி.

பால் ஊற்றி திரும்பும்போது

தெருவில் அனைவரும் 

சுடச்சுட காபியை 

சுவைத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களை  பார்த்து ஏங்கியபடி,

வீட்டுக்கு வந்த

சிறுமிக்கு கிடைத்தது

பழங் கஞ்சி.


(எழுத்தாளர் பற்றி ... சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர் . சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது ‌ போன்ற 15 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்.)