தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026...இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை இன்று மாலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
தமிழக சட்டசபையில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31ம் தேதி துவங்கி, ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 7105 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 07ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. அதற்கு பிறகு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
தமிழக தேர்தலில் போட்டியிட 7105 வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும் இதில் சிலரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தேர்தல் கமிஷன் தெரிவித்து விட்டது. முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலரது வேட்புமனுக்களை ஏற்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இன்னும் சில இடங்களில் ஒரே தொகுதியில் கூட்டணி சார்பில் இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் எந்த தொகுதியில், எந்த கட்சி அல்லது கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் என்பது குறித்த குழப்பங்கள் இருந்து வருகிறது.
இன்று மாலை தேர்தல் கமிஷன் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு யாருடைய வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது, யாருடையது நிராகரிக்கப்பட்டது என்பது தெரிய வரும். எந்த தொகுதியில் யாரெல்லாம் வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள் என்பது குறித்து அனைவருக்கும் தெளிவு ஏற்பட்டு விடும். அதற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் இன்னும் தீவிரமடைய துவங்கும். ஏப்ரல் 21ம் தேதி மாலையுடன் தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடையும்.