இன்று ஒரு புதிய உதயம்...ஆளுநர் நெகிழ்ச்சி பதிவு...எதுக்கு தெரியுமா?
சென்னை: தமிழக சட்டமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு முக்கிய மரபு மாற்றமாக, ஆளுநர் உரையின் தொடக்கத்திலும், இறுதியிலும் என இருமுறை தேசிய கீதம் இசைக்கப்பட்டு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசு இந்த புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
நீண்டகால பேரவை மரபு:
தமிழக சட்டமன்றத்தின் நீண்டகால நடைமுறையின்படி, கூட்டத்தொடர் தொடங்கும் போது முதலாவதாக 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடப்படும். அதன் பின்னர் ஆளுநர் உரை உள்ளிட்ட சபை நடவடிக்கைகள் நடைபெறும். இறுதியாக, கூட்டத்தொடரின் நிறைவிலேயே 'தேசிய கீதம்' இசைக்கப்படுவது பேரவையின் வழக்கமான மரபாக இருந்து வந்தது.
மாற்றத்திற்கான பின்னணி:
இந்த வழக்கமான நடைமுறை கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பேரவையின் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துடன் சேர்த்து தேசிய கீதமும் பாடப்பட வேண்டும் என்று முந்தைய ஆளுநர் ஆர்.என். ரவி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, அவர் 3 முறை ஆளுநர் உரையை முழுமையாகப் படிக்காமல் பாதியிலேயே சபையை விட்டுச் சென்றுள்ளார்.
தவெக அரசின் புதிய நடவடிக்கை:
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பேரவையின் பழைய மரபுக்கு மாற்றாக இன்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்படி, இன்றைய கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சேர்த்து, தேசிய கீதத்தையும் தவெக அரசு இசைக்கச் செய்தது.
ஆளுநர் அர்லேகர் நெகிழ்ச்சி:
இந்த வரலாற்று நிகழ்வு குறித்து தற்போதைய ஆளுநர் அர்லேகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "கடந்த 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்டுள்ளது மிகுந்த மன நிறைவைத் தருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று ஒரு புதிய உதயம் என தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அமைச்சர்கள் விளக்கம்:
பேரவையின் இந்த மரபு மாற்றம் குறித்துத் தமிழக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். சட்டமன்றக் கூட்டத்தின் தொடக்கம் மற்றும் முடிவு என இரு முறையும் தேசிய கீதம் பாடுவதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஆளுநரின் கோரிக்கையை ஏற்று தவெக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே இருந்த நீண்டகால முரண்பாடுகளைக் களைந்து, சுமுகமான சூழலை உருவாக்க வழி வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.