பெண் பிள்ளைகள் - இந்த மண் பிள்ளைகள்.. தேசிய பெண் குழந்தைகள் தினம்!
- எம்.கே. திருப்பதி
கோட்டையோ குடிசையோ
இல்லத்து முதல்வியோ
உள்ளத்து முதல்வியோ - அவள்
இருக்கும் இடம்
தடம் பிறழாது!
உருக்கிய எக்காய்
திடம் பிறழாது!
பெண் பிள்ளைகள் - இந்த
மண் பிள்ளைகள்!
ஆறுகளின்
ஊற்றுக்கண் போல்
அகிலங்களின்
ஊற்றுக் கண்கள்!
மண் மாதாவின்
மாற்றுக் கண்கள்!
அவள்
அப்பாக்களின் தனம்
அம்மாக்களின் மனம்!
ஆசிரியர்களின்
அன்புத் தோட்டம்
அவனிகளுக்கும்
அவளால் ஏற்றம்!
தேசத்தின் தேவதைகள்
பாரதத்தின் பாதைகள்
பாச வானங்களின்
பருவத்து ஊதைகள்!
சிந்தும் சிரிப்புகள்
சிலிர்ப்பைக் கூட்டும்
வையத்தில் சொர்க்கத்தை- அந்த
வஞ்சி இனம் காட்டும்!
தும்பைப் பூவின் வெண்மையாய்
வாழ்க்கை இருக்கும்
அம்பைப் போல் அவளின்
அறிவு - வேகம் எடுக்கும்!
நேர்வகிடும்
ரெட்டை சடையும்
கன்னக் குழியும்
கடவுளுக்கு ஒப்பாகும்!
கிட்டத்தில் நோக்கினால்
எட்டத்தில் நிற்கும்
இனிக்கும் எப்பாகும்!
முரலும் வண்டுகளாய்
திரளும் மொக்குகள்
பள்ளிகளில் ஒரு
அட்சய ஏனம்!
வகுப்பறைகளின்
வசந்தகால வானம்!
மங்கையின்
கிளி பேச்சும்
களி பேச்சும்
பெற்றோர்களின் சுலோகம்!
பெற்றோரின் உலகம்!
சுருங்கச் சொல்லின்
அவள்
ஒரு டன் மகிழ்ச்சி!
ஏழு கடல் எழுச்சி!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)