கவிதையே தெரியுமா???
- கவிஞர் க.முருகேஸ்வரி
கவிதை என்றால் என்ன?
கவிஞன் தன் எண்ணத்தில் எழுத எடுத்துக் கொண்ட கருப்பொருளை உணர்ச்சிப் பெருக்குடன்
உள்ளக் கிளர்ச்சியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் செறிவான வார்த்தைகளைக் கொண்டு வனைவதும் வாசிப்போரை வசப்படுத்த புனைவதுமே கவிதை எனப்படும்....
எண்ணத்தின் வித்து
எழுத்தில் செறிவு
உணர்ச்சிகளின் ஊற்று
வார்த்தைகளில் வலிமை
வாசிப்போரை வசப்படுத்தும் அழகியல்
படித்தால் இன்பம் ஏற்பட வேண்டும்
அதில் துன்பமே வடிக்கப்பட்டு இருந்தாலும்.....
வலியைப் பற்றி இருந்தாலும்
வாசித்தால் இதந்தர வேண்டும்....
சுட்டெரிக்கும் பொருள் கொண்டு புனைந்தாலும்
செறிவான மொழியாடி
சுவைக்க வல்லதாக இருக்க வேண்டும்......
காதலாக இருந்தாலும்
நோதலாக இருந்தாலும்
காவியமாய் கொடுக்க வேண்டும்....
கவிதையே!
இதற்குப் பெயர் தான் கவிதையா!!! என்று வியக்கும்படி உனை வடித்து உன் புகழ் காக்க வேண்டும்....
கவிஞர்களின் உணர்வுகளில் எண்ணங்களில் பல வண்ணங்களில்
விதவிதமான வடிவங்களில்
எழுத்தாகிக் கொஞ்சி விளையாடும் கவிதையே...
இன்று உனக்கான ஒரு நாள் என்பது உனக்குத் தெரியுமா???
ஆம்....
மார்ச் மாதம் 21 ஆம் தேதி உலகக் கவிதை தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது....
இந்த நாளில் நாம் கவிஞர்களைப் போற்றலாம்....
கவிஞர்களின் சிறப்புகளை நினைவு கூறலாம்...
மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறலாம்..,
கவிதைகளைப் படிக்கலாம்....
கவிதைகளை வடிக்கலாம்...
கவிதைப் போட்டி நடத்தலாம்....
கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
கவிதைக்கு ஒரு நாளா!!!!
கவிதையே என் வாழ்நாள்!!!!
இருப்பினும் உனக்கான ஒரு நாள் என்று
உலகம் உணர்த்துகையில்
உன்னை உயர்வாய்ப் பாட
உன்னையே உன் மூலம் கொண்டாட
கவிதை ஒன்று எழுதட்டுமா???
என் கவிதையே...!
அன்பின் அகவல் நீ!
பண்பின் பாடல் நீ!
எண்ணத்தின் திண்ணம் நீ!
பண்பாட்டின் பாட்டு நீ!
சோகத்தின் கீதம் நீ!
தாகத்தின் தாளம் நீ!
காதலின் வலிகள் நீ!
காதலரின் கவிகள் நீ!
கோபத்தின் கொந்தளிப்பு நீ!
சமுதாயத்தின் பங்களிப்பு நீ
கடலின் அலை நீ
மடலின் கடல் நீ
நிலவின் குளிர் நீ
குளிரில் இதம் நீ
தாலாட்டும் தென்றல் நீ
சீராட்டும் செந்தமிழ் நீ
மழைத்துளியின் மாயாஜாலம் நீ
வார்த்தைகளின் வர்ண ஜாலம் நீ....
காட்சிகளின் கண்ணாடி நீ!
உணர்ச்சிகளின் உயிர்நாடி நீ!
எழுச்சி மிக்க ஏவுகணை நீ!!!
புரட்சிமிக்க புயல் நீ!!!
அனுபவத்தின் எல்லை நீ!
அன்னைத் தமிழின்
அன்புப் பிள்ளை நீ!!!
பக்தியில் பரவசம் நீ
எப்பொழுதும் என் வசம் நீ!
உலகக் கவிதை தின நல்வாழ்த்துகள் கவிதையே !!!
அனைவருக்கும் இனிய கவிதை தின நல்வாழ்த்துகள்!
எல்லோரும் சந்தோஷமாக கவிதை எழுதுங்கள்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).