தீமையை அழித்து.. ஆணவத்தை அழித்து.. நல்லெண்ணெங்களை விதைக்கும்.. சூரசம்ஹாரம்!

Swarnalakshmi
Oct 27, 2025,11:21 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சூரசம்ஹாரம் .. இன்று, விசுவா வசு வருடம் 20 25 அக்டோபர் மாதம் 27ஆம் நாள் திங்கட்கிழமை முருகப்பெருமான் சூரபத்மன் எனும் அரக்கனை அழித்த நிகழ்வான  "சூரசம்ஹாரம்" நடைபெறுகிறது. சூரசம் ஹாரத்தின்  முக்கியத்துவம் தீமையை அழித்து   நன்மை புரிவதையும், ஆணவம் போன்ற அசுர  எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்பதையும் குறிக்கிறது. 


இந்த விழாவானது ஆறு நாட்கள் அனைத்து முருகன் கோவில்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விரதம் கடை பிடித்தவர்கள் இன்று ஆறாம் நாள் சூரசம்ஹார நிகழ்வு நடைபெற்றவுடன் தங்கள் விரதத்தை முடித்து கொள்வார்கள். சிலர் ஏழாம் நாளான 28ஆம் தேதி  முருகப்பெருமான்  திருக்கல்யாணம் நடைபெற்ற நிகழ்வுடன் கந்த சஷ்டி  விரதம் முடித்துக் கொள்வர். இது மிகவும் சிறப்பானது.


வளர்பிறை சஷ்டியான ஐப்பசி மாதம் பத்தாம் நாளான இன்று இந்த சூரசம்ஹார  நிகழ்வு திருச்செந்தூர் மற்றும் பிற முருகன் கோவில்களில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.


புராணக்கதை :




சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும்  இந்திர ஞாலம் எனும் தேரை வரமாக பெற்றான். தனக்கு சாகா வரம் வேண்டும் என்று கேட்டான். ஆனால் சிவன், பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் எந்த வகையில் உனக்கு அழிவு வர வேண்டும் என கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தனக்கு அழிவு வரவேண்டும் என்றான். 


சூரபத்மன் அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு முப்பத்து முக்கோடி தேவர்களையும் கொடுமை செய்தான். அவனுடைய கொடுமை தாங்க இயலாமல் தேவர்கள்,சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியேறிய தீப்பொறிகள்  சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது ஆறு குழந்தைகளாக தோன்றின. அவர்களே ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி கட்டி அணைக்க ஆறுமுகங்களும்,பன்னிரு கரங்கள் கொண்ட முருகப்பெருமானாக தோன்றினார். அதனால் இவருக்கு 'ஆறுமுக சுவாமி' என்ற பெயரும் உண்டு. 


ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல் ) செய்ததால் முருகனுக்கு 'கந்தன்' என்ற பெயரும் உண்டு. ஆறுமுக கடவுளான முருகன் தேவர்களின் குறைகளை போக்க, அசுரர்களை அழிக்க முயன்றான். சூரன் பச்சை பிள்ளையென முருகனைப் பார்த்து பரிகாசம் செய்தான். உடனே சூரன் மகா சமுத்திரமாக  உருமாறி பெரிய அலைகளுடன் முருகனை பயமுறுத்தி பார்த்தான். அப்போது முருகன் நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார். கடல் பயந்து பின் வாங்கியது. முருகனின் விஸ்வரூபத்தை சூரன் பார்த்ததும், அவனின் ஆணவம் மறைந்து, தெய்வமான, "உன் கையால் மடிவதே நான் பாக்கியமாக கருதுகிறேன்". என்றான். இதனால்தான் திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் நீராடியதும் ஆணவம் நீங்கி, முருகன் திருவடியேகதி என சரணடைவர்.


ஆனாலும் சூரனின் ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி முருகனிடமிருந்து தப்பிக்க முயன்றான். முருகப்பெருமான் தன் தாயிடம் இருந்து ஐந்தாம் நாள்  வேலை பெற்று, ஆறாம் நாள் சூரனை ஆட்கொண்டு வெற்றி பெற்றார். சூரசம்ஹாரத்தோடு  விழா முடிவதில்லை.மறுநாள் இந்திரன் தன்மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைக்கும் வைபவத்தோடு விழா நிறைவு பெறுகிறது.


"வேல் "என்றால்  கொல்லும் ஆயுதம் அல்ல, அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டு பொருள்.அதனால் தான் "வேல் வேல் வெற்றிவேல்" என்று பக்தர்கள் முழங்குகிறார்கள். சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது 'கந்த சஷ்டி 'விழாவாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோமாக.


திருச்செந்தூர் சென்று சூரசம்ஹார நிகழ்வை நேரில் காண இயலாதவர்கள் தொலைக்காட்சியில் கண்டு 'கந்த சஷ்டி கவசம் ' பாராயணம் செய்து ஆறு நாட்கள் விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் இந்த ஒரு நாள் மட்டும் விரதம் இருந்து முருகப்பெருமானை மனதார வேண்டி முருகன் அருள் பெற்று நல்வாழ்வு வாழ்வோமாக.


மேலும் இன்று பிறந்தநாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் தென்தமிழ் சார்பாக நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.