'எண்'ணற்ற சாதனைகள் படைத்த.. கணித மேதை சீனிவாசன் ராமானுஜன்!

Su.tha Arivalagan
Dec 22, 2025,01:09 PM IST

 - மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


கணித மேதை இராமானுஜம் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நேரத்தில், நமது முன்னோர்கள் பயன்படுத்திய அளவைகள் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களைத் தெரிந்து கொள்வோமா. 


1.அளவைகள் என்பது  மனிதர் முதன்முதலில் தம் உடலுறுப்புகளைத் தான் எண்ணவும் அளக்கவும் பயன்படுத்தினர். இப்படி அளக்கும் முறைகள் ஆகும்.


2. எண்ணல் அளவை, நீட்டல் அளவை , முகத்தல் அளவை என மூன்று பிரிவுகளாக பிரிப்பார்கள். 


3. எண்ணலளவை என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை எண்ணி சொல்லக்கூடிய  அளவைகள்  ஆகும்


4. ஒன்று, இரண்டு, 10 ,100 ஒரு ஜோடி, ஒரு டஜன், ஒரு சீப்பு,ஒரு கட்டு என்று எண்களை எண்ணுவார்கள்.


5. ஒரு ஜோடி =2

ஒரு டஜன் =12

ஒரு கட்டு =10,100 என்ற எண்ணிக்கையில் கட்டுவார்கள் 


6. நீட்டலளவை என்பது நீளம், அகலம், உயரம் போன்றவற்றை நீட்டி அளப்பதற்கு பயன்படுவது ஆகும்.

  

7. விரற்கிடை என்பது ஒரு விரலின் தடிமன் ஆகும். இதனை ஒரு விரற்கிடை என்பர். 




8. நான்கு விரல்களைச் சேர்த்து நீட்டினால் சுட்டுவிரலுக்கு இப்புறமிருந்து சுண்டுவிரலுக்கு அப்புறம் வரை உள்ள தொலைவு, நான்கு விரற்கிடை என்பார்கள். 


9. ஒட்டை என்பது கட்டை விரலின் நுனியிலிருந்து சுட்டுவிரலின் முனைவரை உள்ள தூரம் ஓர் ஒட்டை ஆகும்.


10. சாண் என்பது கட்டை விரல் முனைக்கும் சுண்டுவிரல் முனைக்கும் இடையே உள்ள தொலைவு ஆகும்.


11. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மனித உடலின் அளவு எட்டு சாண், அவரவர் கையால். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்பது பழமொழி; “எறும்புந் தன் கையால் எண் சாண்” என்றார் ஒரு புலவர்.


12. முழம் என்பது இடக்கையின் நடுவிரல் நுனியிலிருந்து இடக்கையின் முட்டி வரை உள்ள தூரம் ஆகும்.


13. அடி என்பது காலைத் தரையில் ஊன்றினால் விரல்களுக்கும் குதிகாலுக்கும் இடையில் இருக்கிற தொலைவு ஆகும்.


14. சிட்டிகை என்பது கட்டை விரல் நுனி, சுட்டுவிரல் நுனி இரண்டையும் இணைத்து அள்ளினால் கிடைக்கிற அளவு ஒரு சிட்டிகை ஆகும்.


15. நாட்டு மருத்துவர்கள் தங்கள் செந்தூரம் முதலான தூள் மருந்துகளை ஒரு சிட்டிகை, அல்லது இரு சிட்டிகை (நோய்க்குத் தக்கவாறு) எடுத்துத் தேனில் குழைத்து நக்கச் சொல்வார்கள்.


16. ஒரு கைப்பிடி என்பது நெல் முதலியவற்றைக் கையால் அள்ளி போடுவது ஆகும்.


17. ஒன்று, அரை, கால், முக்கால், நாலுமா, வீசம், மா, காணி, மாகாணி போன்ற பின்ன அளவுகளை எண்ணல் முறையில் பயன்படுத்தினார்கள் .


18. அணு, சிட்டிகை, ஆழாக்கு, உழக்கு, படி, நாழி, மரக்கால், பதக்கு, களம், பொதி, கோட்டை போன்ற அளவுகளை முகத்தல் முறையில் பயன்படுத்தினார்கள்.


19. குன்றிமணி, மஞ்சாடி, பணம், வராகன், கழஞ்சு, பலம், வீசை, துலாம் போன்ற முறையில் நிறுத்தல் அளவைகளை பயன்படுத்தினார்கள்.


29. குழி, வேலி, மா, ஏக்கர் போன்ற முறைகளில் நிலத்தை அளக்க பயன்படுத்தினார்கள்.


அப்பாடி இவ்வளவு மேட்டர் இருக்கா இந்த கணக்குல.. என்னங்க இதுக்கே மலைச்சுட்டீங்க.. ராமானுஜம் செய்த சாதனைகளைக் கேட்டா இன்னும் கூட ஆச்சரியப்படுவீங்க.. அதுக்கு முன்னாடி ராமானுஜத்தின் வரலாற்றைப் படிக்கலாம் வாங்க.


1.உலகப் புகழ்பெற்ற கணித மேதை சீனிவாச ராமானுஜன் அவர்கள் டிசம்பர் 22, 1887ல் பிறந்தார். 


2.இவரது பெற்றறோர் சீனிவாசன் , கோமளம்வல்லி ஆவார்.


3.இராமானுஜரின் தந்தை துணிக்கடையில் கணக்காளராக இருந்தார். 


4.ஏழு வயதில் ஸ்காலர்ஷிப் பணம் பெற்று கும்பகோணத்தில் கல்வி பயின்றார்.


5.இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார்.


6.இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்த ராமானுஜம், லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம் எழுதினார்.


7.ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. 


8.ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. 


9.ஹார்டியின் அழைப்பை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்றார் ராமானுஜர். 


10.அங்கு சென்ற சில நாட்களிலேயே ராமானுஜனின் திறமை, உலகின் கவனத்தை ஈர்த்தது.


11.இந்த உயர்விற்கு காரணம் பேராசிரியர் ஹார்டியின் முக்கிய பங்கு ஆகும்.


12.1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டறிந்தார்.


13.எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரையிலான பல்வேறு துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


14.1917 -ம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S விருதையும், டிரினிடி கல்லூரியின் ஃபெல்லோஷிப் விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். 


15.இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் பெற்ற இந்தியன் ராமானுஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

  

16.இராமானுசனின் பெயரால் 1997-ல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.


17.2012ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி, ராமானுஜரின் 125-வது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22-ந்தேதியை தேசிய கணித தினமாகவும் அறிவித்தது. 


18.அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியும் கணித தினம் கொண்டாடப்படுகிறது.


19.கணிதமேதை ராமானுஜரின் எண்ணியல் என்பது அவர் எண் கோட்பாடு, பகுப்பாய்வு, எல்லையற்ற தொடர்கள், தொடர்ச்சியான பின்னங்கள் போன்றவற்றில் செய்த புரட்சிகரமான பங்களிப்புகளைக் குறிக்கிறது.


20.முடிவிலி வரை செல்லும் தொடர்களுக்கான சூத்திரங்களைக் கண்டுபிடித்தார்.


21.ராமானுஜருக்குப் பிடித்த எண்களில் முதன்மையானது 1729. 

 ஹார்டி-ராமானுஜன் எண் என அழைக்கப்படுகிறது.


22.1729 என்ற எண், இரண்டு வெவ்வேறு எண்களின் கனங்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் வெளிப்படுத்தக்கூடிய மிகச்சிறிய எண் ஆகும். (12³ + 1³=1729 மற்றும்  10³ + 9³=1729). 

 

23.அவரது பிறப்பு தேதியான 22-12-1887 (22, 12, 18, 87) எண்களைக் கொண்ட மாயாஜாலக் கணித சதுரங்களையும் அவர் உருவாக்கினார். 


24."ராமானுஜர்" என்ற பெயரில் பலரும் இருப்பதால், கணித மேதை சீனிவாச ராமானுஜன் என்று அழைக்கப்பட்டார். 


25. இராமானுஜர் தன்னுடைய 33வது அகவையில் இந்த உலகத்தை விட்டு மறைந்தார். ஆனால் அவருடைய கணிதமும் அவர் கொடுத்த கணித சூத்திரங்களும் நம்முடன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.