ஓ.. கணிதமே... நீ இல்லையேல் ஒன்றுமே இல்லை.. தேசிய கணித தினம்

Dec 22, 2025,11:38 AM IST

- சுமதி சிவகுமார்


கணிதம் என்பது வெறும் எண்கள் அல்ல; அது பிரபஞ்சத்தின் மொழி. ஒவ்வொரு ஆண்டும் நாம் கொண்டாடும் தேசிய கணித தினம், இந்த உண்மையை நமக்கு நினைவுபடுத்துகிறது.


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ஆம் நாள், இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் அவர்களின் பிறந்தநாளை நாம் 'தேசிய கணித தினமாக' கொண்டாடுகிறோம்.


ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் பல்வேறு கலாச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டாலும், சுழியம் (0) அதாவது ஜீரோ அல்லது பூஜ்ஜியம் என்ற கருத்தாக்கத்தை உலகிற்கு அளித்த பெருமை இந்தியாவையே சாரும்.


எண்களின் மீதான காதல், முடிவிலி (Infinity) பற்றிய தேடல், மற்றும் சிக்கலான கணிதத் தேற்றங்கள் (Theorems) மூலம் உலகையே வியக்க வைத்தவர் ராமானுஜம். முறையான உயர் கல்வி இல்லாமலேயே, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் இவரே.




கணிதம் என்பது பள்ளிக்கூடத்தில் கற்கும் வெறும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மட்டுமல்ல; அது நம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் நீக்கமற நிறைந்துள்ளது. கணிதத்தை அதன் தர்க்கத்தோடு (Logic) புரிந்து கொண்டால், அதைவிட எளிமையான பாடம் வேறில்லை. ஆனால், அதன் அடிப்படையைப் புரியாமல் அணுகினால் அது மலைப்பாகத் தெரியும்.


சமையலில் அளவுகள் சேர்ப்பது முதல், மாத பட்ஜெட் போடுதல், நேரம் மேலாண்மை செய்தல் என அனைத்தும் கணிதத்தின் வெளிப்பாடுகளே. இன்றைய நவீன உலகின் வளர்ச்சிக்குக் கணிதமே அச்சாணி. ஒரு விண்கலத்தைச் சரியாக நிலவிலோ அல்லது செவ்வாயிலோ தரையிறக்க மில்லி செகண்ட் அளவிலான துல்லியமான கணிதக் கணக்கீடுகள் தேவை. வானிலை முன்னறிவிப்பு மற்றும் இயற்பியல் விதிகள் அனைத்தும் கணிதச் சமன்பாடுகளாலேயே இயங்குகின்றன.


இயற்கணிதம் (Algebra), நிகழ்தகவு (Probability), வடிவியல் (Geometry), மற்றும் எண் கோட்பாடு (Number Theory) எனப் பல பிரிவுகள் இன்று கணினித் தொழில்நுட்பத்திலும் (Coding/AI) முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியா உலகிற்கு வழங்கிய தசம முறையே இன்றைய நவீன வணிக மற்றும் கணினி செயல்பாடுகளுக்கு அடிப்படையாக உள்ளது.


மருத்துவம் என்பது உயிரியல் மட்டுமல்ல, அது நுட்பமான கணிதமும் கூட. ஒரு நோயாளிக்கு வழங்கப்படும் மருந்தின் அளவு (Dosage Calculation), உடல் வெப்பநிலை (Temperature), இரத்த அழுத்தம் (BP) மற்றும் சர்க்கரை அளவு, இதயத் துடிப்பைக் காட்டும் வரைபடங்கள் (ECG), என இவை அனைத்துமே எண்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.


உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒவ்வொரு நொடியும் கணிதத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறான். கணிதம் என்பது மனித அறிவின் மிக உயர்ந்த மற்றும் மிக அற்புதமான படைப்பு. அப்படிப்பட்ட அருமையான கணிதத்தில் மேதையாக திகழ்ந்த ராமானுஜத்தின் பிறந்த நாள் இன்று. அதை கொண்டாடுவோம்.. இனிய தேசிய கணித தின வாழ்த்துகள்!


(சுமதி சிவகுமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து 

நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்