நவராத்திரி.. எத்தனை வகை இருக்கு பாருங்க.. அதுல இன்னிக்கு என்ன விசேஷம் தெரியுமா?

Su.tha Arivalagan
Mar 17, 2026,01:34 PM IST

- தி. மீரா


நவராத்திரி விழா நாம் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று.அது காலத்திற்கேற்ப வகைப்படுத்தியுள்ளார்கள்.


ஆஷாட நவராத்திரி

சாரதா நவராத்திரி 

வசந்த நவராத்திரி 

சியாமளா நவராத்திரி 

அதில் வசந்த நவராத்திரியை பற்றி பார்ப்போம்.


வசந்த நவராத்திரி 


இந்திய திருவிழாக்கள் மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமைக்கும் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றில் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று வசந்த நவராத்திரி. இது சக்தி தேவியை போற்றும் புனிதமான ஒன்பது நாள் விழாவாகும். இந்த நவராத்திரி பெரும்பாலும் பங்குனி மாத இறுதியிலும் அல்லது சித்திரை மாத தொடக்கத்திலும் (மார்ச்–ஏப்ரல்) வரும். வசந்த காலத்தில் நடைபெறும் என்பதால் இதற்கு வசந்த நவராத்திரி என்று பெயர் வந்தது.


வசந்த நவராத்திரியின் பொருள்




“நவராத்திரி” என்பது “ஒன்பது இரவுகள்” என்று பொருள். இந்த ஒன்பது நாட்களிலும் சக்தியின் பல வடிவங்கள் வழிபடப்படுகின்றன.


வசந்த காலம் இயற்கை புத்துணர்ச்சி பெறும் காலமாகும். மரங்கள் புதிய இலைகளை முளைக்கச் செய்து, மலர்கள் பூத்து உலகம் அழகாகும். அதுபோல மனித மனமும் புதுப்பித்து, நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதையே இந்த விழா உணர்த்துகிறது.


வழிபடும் தெய்வங்கள்


வசந்த நவராத்திரியில் ஒன்பது நாட்களும் நவதுர்கைகள் என்ற சக்தியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன. அவை:

ஷைலபுத்திரி

பிரம்மச்சாரிணி

சந்திரகண்டா

குஷ்மாண்டா

ஸ்கந்தமாதா

காத்த்யாயனி

காலராத்திரி

மகாகௌரி

சித்திதாத்ரி

இந்த ஒன்பது வடிவங்களும் மனித வாழ்க்கையில் உள்ள அறிவு, தைரியம், சக்தி, கருணை, செல்வம் போன்ற நல்ல பண்புகளை குறிக்கின்றன.


விழா நடத்தும் முறை


19/3/26 முதல் ஆரம்பம்

வசந்த நவராத்திரியில் மக்கள் வீட்டிலும் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர். சிலர் நோன்பு இருந்து அம்மனை வழிபடுவர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் தீபம் ஏற்றி, மலர் சமர்ப்பித்து, தேவியின் ஸ்தோத்திரங்களை பாடுவர்.


கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெறும். பக்தர்கள் அம்மனின் அருளைப் பெற மனமார பிரார்த்தனை செய்கிறார்கள்.


ராம நவமி(27/3/26)


வசந்த நவராத்திரியின் ஒன்பதாவது நாளோ அல்லது பத்தாவது நாளோ ராம நவமி எனும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இராமபிரான் பிறந்த தினம் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த நாள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. ராமாயணம் பாராயணம் செய்யப்படுகிறது.


ஆன்மீகப் பயன்


வசந்த நவராத்திரி மனிதர்களுக்கு பல நல்ல கருத்துகளை கற்பிக்கிறது.

தீமையை விட நல்லதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.

தெய்வ நம்பிக்கை வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

இந்த விழா அறிவு, ஒழுக்கம், பக்தி, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும்.


வசந்த நவராத்திரி என்பது ஒரு சாதாரண திருவிழா மட்டுமல்ல; அது மனித மனத்தை புதுப்பிக்கும் ஒரு ஆன்மீக விழா. இயற்கை புத்துணர்ச்சி பெறும் வசந்த காலத்தில் இந்த விழா நடைபெறுவது மிகவும் அர்த்தமுள்ளதாகும். சக்தி தேவியை வழிபட்டு நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதை இந்த திருவிழா உணர்த்துகிறது.

அதனால் வசந்த நவராத்திரி இந்திய கலாச்சாரத்தின் ஆன்மீக பெருமையை வெளிப்படுத்தும் முக்கியமான திருவிழாவாகும்.


(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)