சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

Mar 13, 2026,05:04 PM IST

- நவீன் ஸ்ரீதர்.வி


கடந்த வாரம் கடம்பவனத்தில் சிவபெருமான் முதல் சுயம்பு லிங்கமாகவும் அம்பிகை சக்தி பீடமாகவும் தோன்றியதை பற்றிப் பார்த்தோம். தற்போது கடம்பவனத்தில் இருந்த சிவலிங்கத்தை முதலில் கண்டறிந்தது யார் என்பதை பற்றிப் பார்ப்போம்.


இதை விளக்கும் நிகழ்வே திருவிளையாடல் புராணத்தின் முதல் படலமான இந்திரன் பழி தீர்த்த படலமாக உள்ளது.   இக்கதை மிகவும் பெரியது, எனவே சுருக்கமாக விளங்கும்படி பார்ப்போம்.




தேவலோகத்தில் ஒரு முறை இந்திரனின் சபைக்கு தேவ குருவான பிரகஸ்பதி (நவகிரகங்களில் உள்ள வியாழ பகவான்) வருகை தந்தார், குருவை காணாது இந்திரனோ தேவ கன்னியரின் நாட்டியத்தை கண்டு ரசிக்க, தன்னை மதிக்காததை கண்ட தேவகுரு பிரகஸ்பதி மனம் நொந்து அவ்விடத்தை விட்டு செல்கிறார். பின்னர் இதை அறிந்த இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியை தேடிச் செல்கிறான்.ஆனால் தேவகுரு இந்திரனின் கண்ணில் அகப்படவில்லை. எனவே செய்வதறியாது பிரம்மாவிடம் செல்கிறான் இந்திரன். பிரம்மாவோ, துவஷ்டா என்னும் ரிக்ஷியின் மகனான அசுர குலத்தை சேர்ந்த திரிசிரன் என்பவன் வேத நெறிப்படி வாழ்பவன் என்றும் அவனை தேவகுருவாக ஏற்கும்படியும்  சொல்கிறார். 


அசுரனை குருவாக ஏற்பதா என்று திகைத்தாலும் பிரம்மாவின் அணையை உதாசீனம் செய்யாது ஏற்று திரிசிரனை சந்தித்து அவனை  தேவகுருவாக இருக்கும் படி வேண்டுகிறான் இந்திரன். திரிசிரனுக்கு மனமில்லை என்றாலும் இவ்வாய்பை தன் அசுர குலத்துக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி தேவகுருவாக சம்மதிக்கிறான். பின்னர் தேவலோகத்தில் தேவர்கள் நலனுக்காக யாகம் ஒன்று நடக்கிறது. ஆனால் அதில் திரிசிரன் தனது அசுர குலம் உய்வடைய வேண்டிய மந்திரங்களை சொன்னதால் கோபம் கொண்ட இந்திரன் தனது ஆயுதத்தால்  அப்போதைய தேவகுருவாக இருந்த திரிசிரனை கொன்று விடுகிறான். இதையறிந்த திரிசிரனின் தந்தையான ரிஷி துவஷ்டா  வேள்வியின் மூலம்  இந்திரனை அழிக்க விருத்திராசுரன் என்னும் அசுரனை உண்டாக்கி தேவர்களுக்கு எதிராக அனுப்புகிறார். 




அபயம் வேண்டி இந்திரன் பிரம்மா மற்றும் விஷ்ணுவை சரணடைய அவர்களின் ஆலோசனைப்படி ததீசி முனிவரின் முதுகெலும்பை பெற்று வஜ்ராயுதம் என்னும் ஆயுதத்தை செய்து அதன்மூலம் விருத்திராசுரனையும் கொல்கிறான் இந்திரன். ஏற்கனவே தேவகுரு பிரகஸ்பதியை அவமதித்த பாவமும் ;  இத்துடன் குருவாக ஏற்கப்பட்டவனும், ரிஷி துவஷ்டாவின் மகனுமான  திரிசிரனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும், மேலும் ரிஷி துவஷ்டாவால் வேள்வியின் மூலம் உருவாக்கப்பட்ட விருத்திராசுரனை கொன்றதால் இன்னொரு பிரம்மஹத்தி தோஷமும் இந்திரனை பீடிக்கிறது. இத்துயரம் தாங்க முடியாமல் தேவகுருவான பிரகஸ்பதியை இந்திரன் சரணடைய , பூலோகத்தில் உள்ள புண்ணிய தலங்களை வழிபடும் படியும் அதில் மிக உயர்ந்த புண்ணிய தலத்தில்  வழிபடும்  போது  பாவம் நீங்கும் என்று தேவகுரு பிரகஸ்பதி இந்திரனுக்கு சொல்கிறார்.


இதை ஏற்று இந்திரன் பூலோகத்தில் உள்ள புண்ணிய தலங்களை தரிசித்து வழிபடுகிறான்.எங்குமே பாவம் தீரவில்லை‌. அப்படியே ஒருமுறை கடம்பவனத்தை அடைகிறான். கடம்ப வனத்தில் இந்திரன் அடி எடுத்து வைத்ததுமே அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி தேவ நிலையை அடைகிறான். எந்த இறை மூர்த்தத்தையும் காணவில்லை, வழிபாடும் மேற்கொள்ளவில்லை, இந்த கடம்பவனத்தில் காலை வைத்ததுமே தனது ஒட்டுமொத்த பாவமும் நீங்கியதை உணர்ந்து மிகவும் ஆச்சரியப்பட்டு, இந்த கடம்பவனத்தில் ஏதோ இருக்கிறது என்று தேட தொடங்கி ஒரு கடம்ப மரத்தின் முன் சுயம்பு லிங்கம் இருப்பதை காண்கிறான். மிகக் கொடிய பாவத்தை நீக்கும் ஆற்றல் கடம்பவனத்துக்கே உண்டு என்றால் அதன் நடுவில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தின் ஆற்றல் எத்தகையதாக இருக்கும் என்று நினைத்து வியப்படைந்த இந்திரன், அருகில் இருந்த குளத்தின் நீர் எடுத்து சிவலிங்கத்துக்கு  அபிஷேகம் செய்து வணங்கி மகிழ சிவபெருமான் காட்சி தருகிறார்.




தனக்கு இந்திரபதவி கூட வேண்டாம் என்றும், நித்தமும் இந்த கடம்பவன லிங்கத்தை பூஜிக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என்றும் சிவபெருமானிடம் இந்திரன்  வேண்ட, எம்பெருமான் இந்திர பதவியின் மேன்மையை உணர்த்தி அதை தொடரவும், ஆண்டுக்கு ஒரு முறை சித்திரை பௌர்ணமி நாளில் கடம்பவனம் வந்து தன்னை வழிபட்டால் தினமும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்றும் கூறி அருளுகிறார். மகிழ்ந்த இந்திரன் அருகில் இருந்த குளத்தில் தங்க தாமரையை மலரச் செய்து அதை கொண்டு சிவலிங்கத்தை பூஜித்து மகிழ்ந்து (அந்த குளமே இன்றைய பொற்றாமரை குளம்) ,தேவலோக சிற்பியான மயனை அழைத்து சிவலிங்கத்துக்கு சிறப்பான விமானத்துடன் கூடிய சிறு ஆலயம் அமைக்க உத்தரவிட அவ்வண்ணமே எட்டு திசைகளில் எட்டு யானைகள் மற்றும் 24 சிங்கங்கள் பூத கணங்கள், தேவர்கள் தாங்கி பிடிக்கும் அமைப்புடைய விமானத்தை உண்டாக்கி மகிழ்ந்து  தேவலோகம் சென்று    தனது  பதவியில் தொடர்கிறான் இந்திரன் . இவ்வாறாக இந்திரன் அமைத்த விமானமே இன்றளவும் இந்திர விமானம் என்ற பெயருடன் திகழ்கிறது.


இன்றும் சித்திரை பௌர்ணமி நாளில் இந்திரன் முதலான தேவர்கள் வந்து வழிபடும், இந்திரன் பூஜிக்கும் நிகழ்வும் இன்றும் மதுரை கோவிலில்  நடைபெறுகிறது. மேலும் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத சிறப்பாக இத்தலத்தில் மட்டுமே ஷோடச உபசார தீபங்களுடன் திசை காவலர்கள் எனப்படும் அஷ்டதிக் பாலகர்களான தேவர்கள் வணங்கிய நிலையில் ஆரத்தி உள்ளது.இந்திரன், அக்கினி, வாயு, வருணன், குபேரன், எமன், நிருதி, ஈசானன் ஆகிய எட்டு தேவர்கள் கை கூப்பி வணங்கிய நிலையில் உள்ள ஆரத்திகள் தினமும் அன்னை மீனாட்சிக்கு மாலை சாயரட்சை மற்றும் இரவு  அர்த்தஜாம பூஜைகளிலும், சொக்கலிங்கப் பெருமானுக்கு இரவு அர்த்தஜாம பூஜையிலும் காட்டப்படும். இது வேறு எந்த தலத்துக்கும் இல்லாத சிறப்பாகும். 


இந்திரன் வணங்கிய கடம்பவன லிங்கம் பிற்காலத்தில் எப்படி வெளி உலகிற்கு தெரிய வந்தது என்பதை அடுத்த தொடரில் சிந்திப்போம் சிறப்பாக....


மீனாக்ஷீம் !!!


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்