செல்வச் செழிப்பான வாழ்வை அருளும்.. விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு!
- ஸ்வர்ணலட்சுமி
விசுவாவசு வருடம் 20 26 பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாசி மாதம் முதல் நாள் செல்வ செழிப்பான வாழ்வை அருளும் விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு செய்ய உகந்த நாள்.
வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் வருகிறது. அவ்வகையில் மகத்துவமான மாசி மாதம் முதல் நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாள் செய்யும் வழிபாடு பல ஏகாதசி விரத வழிபாடு செய்வதற்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
ஆண்டின் மூன்று புண்ணிய காலங்கள்:
ஒவ்வொரு வருடமும் மூன்று புண்ணிய காலங்கள் வருகின்றன. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு,சிவன் ஆகியோருக்கு உகந்த காலங்களாக இவை அமைந்துள்ளன. முப்பெரும் தெய்வங்களுக்கு தலா நான்கு மாதங்கள் வீதம் வழிப்பாட்டு மாதங்களாக உள்ளன.
முப்பெரும் தெய்வங்களின் புண்ணிய காலம் எவை என அறிவோம்.
காசி,ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி மாத பிறப்பு 'விஷ்ணுபதி புண்ணிய காலம் 'என அழைக்கப்படுகிறது.
சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகிய மாத பிறப்பு பிரம்மாவுக்கு உரியவை இவை 'விஷு புண்ணிய காலம் 'ஆகும். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை சிவனுக்குரிய காலமாகும். எனவே இவை' ஷட சீதி புண்ணிய காலம் ' ஆகும். ஷடாங்கன் என்பது சிவபெருமானை குறிக்கின்றது.
மாசி முதல் நாளான விஷ்ணுபதி புண்ணிய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு புண்ணிய காலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும். ஆகையால் பெருமாள் கோவிலுக்கு சென்று 27 முறை பெருமாளை வலம் வருவது சிறப்பு.
விஷ்ணுபதி புண்ணிய காலம் எது?
இந்த காலம் பெருமாளின் நரசிம்ம அவதாரத்தோடு தொடர்புடையது. இரணியனை சம்ஹாரம் செய்து தனது பக்தனான பிரகலாதனை காப்பாற்றிய நரசிம்மரின் கோபம் தணியாமல் தன்னுடைய உக்கிரமான வடிவிலேயே இருந்த நேரம்,தேவர்களும் முனிவர்களும் பயந்து மகாலட்சுமி தேவியை வேண்டினர். மகாலட்சுமியும் பெருமாளை சாந்தப்படுத்த ஒப்புக்கொண்டு பயபக்தியுடன் நரசிம்மனிடம் நெருங்க, மகாலட்சுமி நிழல் பட்டவுடன் சாந்தமடைந்து அவள் வேண்டியபடி மடியில் வைத்து கருணை வடிவமான லட்சுமி நரசிம்மராக மாறினார் மகாவிஷ்ணு.இது நடைபெற்ற காலமே விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்து இருப்பதாக நம்பப்படுகிறது.
நேரம்:
மாசி முதல் நாள் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 10:00 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் உள்ளது. பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதனால் வாழ்க்கையில் அனைவருக்கும் மிகப் பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
வழிபாடு:
காலை 10 மணி வரை விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கிறது.எனவே அதிகாலை எழுந்து குளித்து 27 மலர்கள் கையில் வைத்து, பெருமாளின் கருவறையை கொடி மரத்தோடு சேர்த்து 27 முறை வலம் வர வேண்டும். ஏனெனில், எண்ணிக்கை தவறாமல் இருப்பதற்காக 27 மலர்கள். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் ஒரு மலரை எடுத்து கொடி மரத்தின் பாதத்தில் வைத்து பிரதட்சணை முடித்து பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி அர்ச்சனை செய்வது சிறப்பு.
பலன்கள்:
விஷ்ணுபதி புண்ணிய கால விரதம் மன அமைதியையும், மோட்சத்தையும் தரும் புண்ணிய விரதம் ஆகும். மகாவிஷ்ணு &மகாலட்சுமி துதிகளை மனதார பாராயணம் செய்து விரதம் மேற்கொண்டு, வீடுகளில் விளக்கேற்றி விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதும், "ஓம் நாராயணா" "கோவிந்தா" என மனதார உச்சரிப்பதும் மிகுந்த பலன் அளிக்கும். வாழ்வில் முன்னேற்றம், திருமணத்தடை, பணப்பிரச்சனை, கடன் தொல்லை,நல்வாழ்வு பெற விஷ்ணுபதி புண்ணிய காலம் விரதம் மேற்கொண்டு பூஜை செய்வது சிறப்பு. பெருமாளுக்கு உகந்த ஏகாதசி விரதத்தை விட பன்மடங்கு பலன் தரும் அபூர்வ காலம் விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும்.
வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் புண்ணியம் சேர்ப்பது மிகவும் அவசியம் ஆகும். எத்தனை செல்வங்கள் சேர்த்தாலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் இறுதியில் வருவது அவர் சேர்க்கும் பாவ,புண்ணியங்களே. எனவே பெருமாளை வழிபட்டு புண்ணியம் சேர்த்து நல்வாழ்வு வாழ்வோமாக. 🙏
மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.