உலக செரிமான ஆரோக்கிய தினம்: வயிற்றை ஆரோக்கியமாக வைக்க எளிய வழிகள்!
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
இன்று உலக செரிமான ஆரோக்கிய தினம். நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அடித்தளமாக விளங்குவது நம் செரிமான மண்டலம் தான். 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்' மற்றும் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கு ஏற்ப, நம் வயிற்றை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய வழிகளைப் பின்பற்ற வேண்டும்.
தினமும் உடலுக்குத் தேவையான அளவு போதிய தண்ணீர் குடிக்க வேண்டும். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில், சரியான கால இடைவெளியில் உணவு உட்கொள்வது மிகவும் அவசியமான பழக்கமாகும்.
சாப்பிடும் போது உணவின் சுவையை ரசித்து, நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அதைவிடுத்து டிவி மற்றும் மொபைல் போன் பார்த்துக் கொண்டு சாப்பிடக் கூடாது. 'நன்கு பசித்த பின் புசி' மற்றும் 'ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடப் பழகு' என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்'.
'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதை உணர்ந்து, நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், ஜங்க் ஃபுட் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் ஆகியவற்றை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உடலுக்கு நல்ல ஊட்டச்சத்து தரக்கூடிய சிறுதானிய உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுதானியங்களில் செய்யப்படும் பலகார வகைகளைச் சாப்பிடுவதன் மூலமும், கஞ்சி குடித்து வேகவைத்துச் சாப்பிடுவதன் மூலமும் நல்ல உடல் நலத்தைப் பெற முடியும். உணவோடு சேர்த்து, 'உடலினை உறுதி செய்' என்ற வரிகளுக்கு ஏற்ப தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
"காலை மாலை காற்று வாங்கி வருவோரின், காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப்போவானே" என்பதற்கு ஏற்ப, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நல்ல காற்றை சுவாசித்து நடைப்பயிற்சி மேற்கொள்வது நம் செரிமானத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் நீடித்திருக்கச் செய்யும்.
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராக, சிறுகதை, கவிதை, கட்டுரை, வகுப்பறை அனுபவம், நடிப்புத்திறன், பாடல் பாடுதல் போன்ற பன்முகத் திறமைகளுடன் வலம் வருகிறார்.).