தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

Meenakshi
Oct 24, 2025,05:01 PM IST

சென்னை: தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதற்கு முந்தைய நாட்களான அக்டோபர் 18 மற்றும் 19 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இந்நிலையில், பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்தது.




இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்: இந்த ஆண்டு 20ம் தேதியன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள். அரசுஅலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 21 செவ்வாய்கிழமை ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும். அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் அக்டோபர் 25 சனிக்கிழமை பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


இதன் அடிப்படையில், நாளை (அக்டோபர் 25) தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது. அதனை ஈடு செய்யும் விதமாக, அக்டோபர் 25ம் தேதி நாளை வேலைநாளாக செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி,மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.