கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

Meenakshi
Dec 06, 2025,01:40 PM IST

சென்னை: எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அம்பேத்காருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.


அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இளமையிலெயே கல்வியில் சிறந்து விளங்கினார். பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு உண்டு. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அம்பேத்கர் பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தைத் தழுவியவர்.


பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர் . ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத்திறன்களைப் பெற்றவர். இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்டமேதை அம்பேத்கர். அம்பேத்காரின் நினைவு நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளனர். 




அம்பேத்கர் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், 


புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்!


எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.


அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று தெரிவித்துள்ளார். 


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், சமத்துவத்தை சட்டங்களில் மட்டுமல்ல, மனிதர்களின் உள்ளத்திலும் நிலைநிறுத்த வேண்டும் என அயராது பாடுபட்ட சிந்தனையாளர்.


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் சமரசமின்றி, தன் இறுதி மூச்சு உள்ளவரை போராடிய புரட்சியாளர்டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.