விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
மதுரை: அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்ந்துகொண்டுள்ளார். இது என்ன நிலைப்பாடு என எனக்குப் புரியவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், செங்கோட்டையன் எனக்கு மூத்த சகோதரர் போன்றவர். நான் தவெக கூட்டணிக்கு வர வேண்டுமென்று அவர் விரும்பினார். கூட்டணிக்கு வருவேன் என நம்பினார். அவர் சொல்வதுபோல, சூழ்நிலை காரணமாக என்டிஏ கூட்டணிக்கு செல்லவில்லை. நானாக முடிவு எடுத்து தான் சென்றேன். எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
அரசியல் என்பது சதி நிறைந்த துறை. நான் ஜெயலலிதாவால் அரசியலுக்கு வந்தவன். ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதற்காகத் தான் அதிமுக கூட்டணிக்கு சென்றேன். ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் என்னை சந்தித்தார். அரசியல் ரீதியாக வரவில்லை. எனக்கு நல்ல நண்பர். மீண்டும் வந்து சந்திப்பதாக கூறிச் சென்றிருக்கிறார்.
அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்ந்துகொண்டுள்ளார். இது என்ன நிலைப்பாடு என எனக்குப் புரியவில்லை. அம்மா ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என நட்பு ரீதியாக அதிமுகவினர் அழைத்தனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமமுக தங்கள் கூட்டணியில் வர வேண்டும் என விருப்பப்பட்டார். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதற்காகவே அதிமுக கூட்டணிக்குச் சென்றேன். எனக்கு யாரும் எந்த அழுத்தமும் தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.