2026ல் திமுக - தவெக இடையே தான் பேட்டி... அதிமுகவிற்கு 3வது இடம் தான் : டிடிவி தினகரன் பேட்டி!

Meenakshi
Nov 06, 2025,05:03 PM IST

சென்னை: தவெக வருகையால் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி. அதிமுகவிற்கு  3வது இடம் தான் கிடைக்கும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி அமைந்தால், அவர் நிறுத்திய வேட்பாளர்கள் தோற்றுபோய்விடுவார்கள் என 2021 தேர்தலில் நான் கூறினேன். அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள், திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாரும் ஒரு அணியில் வர வேண்டும் என்று சொன்ன போது, இது எல்லாம் நடக்காது என்று. தெரிந்து தான் சொன்னேன். கடந்த 5 ஆண்டுகளில் பழனிசாமியின் செயல்பாடுகள், கட்சியின் தலைவராக, பொதுச்செயலாளராக அவருடைய தவறான செயல்பாடுகள். யாரை பார்த்தாலும் பயம். 


தலைமைப்பண்பு என்றால் எல்லாரையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். எந்த கட்சியில் பிரச்சனை இல்லாமல் இருக்கு?.. ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார். அதன்பின்னர் ஜானகி அணியில் இருந்தவர்களை சேர்த்துக்கொண்டார். ஏன் ஓ பன்னீர்செல்வம் கூட ஜானகி அணியில் இருந்தவர் தான். அவரை ஜெயலலிதா சேர்க்கவில்லையா. கட்சியில் சேர்த்ததுடன்  முதலமைச்சரும்  ஆக்கினார்.




தனிப்பட்ட முறையில் பேசியவர்களை கூட, எல்லாத்தையும் புறந்தள்ளிவிட்டு எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக எல்லாரையும் சேர்த்தார். அதற்காக என்னை சேர்க்க சொல்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். நான் எக்காரணம் கொண்டும் பழனிசாமியோடு சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. ஓபிஎஸ், சசிகலா, செங்கோட்டையனை எல்லாம் சேர்த்து இருக்கலாம். சுயநலத்தோடு இப்படி செய்கிறார்.. கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல், அவர் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு தலைவருக்கான தலைமைப்பண்பு இல்லை என எல்லாருமே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். 


விஜய் அவர்களது அரசியல் பயணத்திற்கு பிறகு இபிஎஸ் 3 வது இடத்திற்கே செல்வார். திமுக கூட்டணிக்கும் - தவெக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும். இது புது கட்சி. அவர் கூட நான் செல்வதற்காக இப்படி பேசுகிறேன் என்று எல்லாம் இல்லை. நான் முடிவு செய்யவே இல்லை. எதார்த்தமாக ஒரு குடிமகனாக நான் சொல்கிறேன். திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும். விஜய் தலைமையிலான கூட்டணி அமைந்தால் இந்த போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.