துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாதவர் இபிஎஸ் நன்றியை பற்றி பேசுகிறாரா?.. டிடிவி தினகரன்

Meenakshi
Sep 16, 2025,05:13 PM IST

தஞ்சை: நன்றி மறப்பது நன்றன்று என இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாத அவர் நன்றியை பற்றி பேசுகிராரா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


தஞ்சையில் இது குறித்து அவர் பேசுகையில், நன்றி மறப்பது நன்றன்று என இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல இருக்கிறது. நன்றியை பற்றி யார் பேசுவது? துரோகத்தைத் தவிர வேறு எவும் தெரியாத அவர் நன்றியை பற்றி பேசுகிராரா?


அம்மா மறைவிற்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தான் முதல்வராக இருந்தார். அவரை மாற்றி விட்டு, சின்னம்மாவை முதல்வராக மாற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பின்னர், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் துவங்கினார். 




அப்போது திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பழனிச்சாமியை காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுகவின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தான். அவர்களில் 18 பேர் பழனிச்சாமியின் செயல்பாடுகள் சரியில்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்து அவரை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது தனது கட்சியை காப்பாற்ற 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது பழனிச்சாமி தான்.  நன்றிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.


எனது சித்தி பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன்னர், கூவத்தூரில் நான் தான் முதல்வர் வேட்பாளர் என எம்எல்ஏக்களிடம் சொல்லதீர்கள். அப்படி சொன்னால் அவர்கள் எனக்கு ஓட்டுப்போட மாட்டார்கள் என சொன்னவர் எடப்பாடி பழனிச்சாமி. என்னை கட்சியில் இருந்து நீக்கியவரும் அவர் தான்.


2024 மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல, 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என பழனிச்சாமி கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் மோடியின் வலது பக்கம் உட்கார்ந்துவிட்டு ஓடிவந்தவர் அவர். இப்போது அதிமுகவை பாஜக தான் காப்பாற்றியது என்று கூறுகிறார். கட்சியை தோற்றுவித்தவர் போலவும், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பெற்றிபெற்று முதல்வரானவர் போலவும் பேசுகிறார். எப்படியெல்லாம் புரூடா விடுகிறார் பழனிசாமி.


நேற்று பேசும்போது எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்கிறார். அப்படி இருக்கும் போது இன்று டெல்லிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏன்? பாஜகவுக்கு விசுவாசமாக மாறி செங்கோட்டையனை கைக்கூலி என பேசுகிறார்.  அவர் முன்னுக்கு பின் முரணாக பேசுவதால் வருகிற தேர்தலில் கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவார். தற்போது 20 சதவீதமகாக இருக்கு அதிமுகவின் ஓட்டு வரும் தேர்தலில் 10 சதவீதமாக குறைந்தாலும் ஆச்சரியமில்லை என்று தெரிவித்துள்ளார்.