என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
சென்னை: விஜய்யின் தவெக கட்சிக்கு விசில் சின்னம் கிடைத்தாலும் கிடைத்தது.. அடுத்தடுத்து விசிலுக்கு சிக்கல்களும், சோதனைகளும் வர ஆரம்பித்துள்ளன. இது தவெகவினரை குஷிப்படுத்தியுள்ளது. காரணம், தங்களது சின்னத்துக்கு இலவசமாகவே இந்த அளவுக்கு பப்ளிசிட்டி கிடைக்கிறதே என்றுதான்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெக கட்சி வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. அந்தக் கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. சின்னம் ஒதுக்கிய செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே அது தமிழ்நாடு முழுக்க பிரபலமாகி விட்டது. தமிழ்நாட்டையும் தாண்டி அது பாப்புலராகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது விசிலுக்கு சோதனையும் கிளம்ப ஆரம்பித்துள்ளது. விஜய் கட்சிக்கு மக்கள் மத்தியில் எளிதாக அடையாளம் கிடைத்து விடுமே என்ற அச்சத்தில் விசிலுக்கு மறைமுகமாக தடை விதிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு வர தடை செய்யப்பட்டது. ஆனால் அந்தத் தடை செய்தது நாங்கள் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு திமுக கவுன்சிலர், விசிலுக்குத் தடை விதித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை நகராட்சியின் 21வது வார்டு திமுக கவுன்சிலர் அயூப் கான் தனது வார்டில் தூய்மைப் பணியாளர்கள் இனி விசில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லியுள்ளாராம். இது அப்பகுதியில் சலலசப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக சின்னம் என்பதால் விசிலை கவுன்சிலர் தடை செய்துள்ளதாக அப்பகுதியில் பேச்சு எழுந்துள்ளது.
சரி அதை விடுங்க தமிழ்நாட்டில் எங்கெல்லாம் விசில் நம்முடைய வாழ்க்கையில் நீக்க முடியாத அங்கமாக உள்ளது. வாங்க பார்ப்போம்.
தமிழ்நாட்டில் விசில் (Whistle) என்பது வெறும் சத்தம் எழுப்பும் கருவி மட்டுமல்ல; அது அதிகாரம், கொண்டாட்டம் மற்றும் பாதுகாப்பு எனப் பல தளங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சாலைகளில் போக்குவரத்தைச் சீர்செய்யவும், விதிகளை மீறுபவர்களை எச்சரிக்கவும் போக்குவரத்து காவலர்கள் விசிலைப் பயன்படுத்துகின்றனர். நீண்ட காலமாக இது பயன்படுத்தப்படுகிறது. இரவு நேரங்களில் ரோந்து செல்லும் காவலர்கள் தங்களின் இருப்பை உணர்த்தவும், சந்தேகப்படும்படியான நபர்களை எச்சரிக்கவும் விசிலைப் பயன்படுத்துவர்.
இரவுப் பணியில் ஈடுபடும் கூர்க்காக்களும் கூட விசிலைத்தான் பயன்படுத்துகின்றனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோரிடம் இருக்கும் மிக முக்கியமான பொருட்களில் விசிலும் ஒன்று.
கபடி, கிரிக்கெட், கால்பந்து எனத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் போட்டிகளில் நடுவர்களின் முக்கியக் கருவி விசில்தான். எல்லா விளையாட்டிலும் விசில் சத்தம்தான் அதிகமாக இருக்கும். காரணம், விளையாட்டிலிருந்து பிரிக்க முடியாதது விசில்.
அது மட்டுமா, தமிழ்நாட்டுக்கே உரிய பிரத்யேகமான கலாச்சாரம் விசில் இது. குறிப்பாக தியேட்டர்களில் விசில் சத்தம்தான் டாப்பில் இருக்கும். பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது, ரசிகர்கள் திரையரங்கிற்குள் விசில் அடித்துத் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்துவார்கள். அதேபோல நடிகர்களும் கூட தங்களது படங்களில் விசில் அடிப்பது போன்ற காட்சியை ஸ்டைலாக வைப்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். (இனி இவர்கள் எல்லாம் விசிலடிப்பார்களா என்று தெரியவில்லையே)
ரயில் புறப்படுவதைக் குறிக்க கார்டு விசில் பயன்படுத்துவார். இது பயணிகளுக்கும் ஓட்டுநருக்கும் இடையிலான சமிக்கையாகச் செயல்படுகிறது. பள்ளிகளில், உடற்கல்வி வகுப்புகள் மற்றும் பள்ளி அசெம்பிளிகளில் மாணவர்களை வரிசைப்படுத்த ஆசிரியர்கள் விசில் பயன்படுத்துவது வழக்கம்.
அட இவ்வளவு ஏங்க.. வீடுகளில் பிரஷர் குக்கரில் கூட விசில் சத்தம்தானே வச்சிருக்காங்க.. சாதம் வெந்து விட்டது, குழம்பு கொதித்து விட்டது என்பதை உணர்த்த!
சில நேரங்களில் ஆபத்து காலங்களில், அதாவது காடுகள் அல்லது மலைப்பகுதிகளில் வழிதவறும்போது உதவி கோரவும் விசில் ஒரு சிறந்த தகவல் தொடர்பு கருவியாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி வாழ்க்கயைில் எல்லா இடங்களிலும் விசில் நீக்கமற நிறைந்திருக்கிறது.
அவ்வளவு ஏன்.. பஸ்களில் கண்டக்டர்கள் கையில் விசில்தான் முக்கிய அம்சமே.. அது இல்லாவிட்டால் பஸ் நிற்காது, நகராது!
இதையெல்லாம் சொல்லி தவெகவினர் ஹேப்பியாக சிரிக்கின்றனர். எல்லாத்தையும் தடுக்க முடியுமா என்று அவர்கள் லாஜிக்காகவும் கேட்கிறார்கள். தேர்தல் முடியும் வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ.. பார்த்து ரசிப்போம் என்று மக்களும்.. கவலைகளை உதறி தோளில் போட்டபடி வேலைகளைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.