தவெக கொடிகளுடன் அதிமுக கூட்டங்களில் பங்கேற்போர் யார்.. இப்போதாவது சுதாரிப்பாரா விஜய்?

Su.tha Arivalagan
Oct 10, 2025,06:15 PM IST

சென்னை: தவெக கொடிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டங்களுக்கு வருவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது நல்லது. இல்லாவிட்டால் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவரது நலம் விரும்பிகள் எச்சரிக்கிறார்கள்.


விஜய்யின் வித்தியாசமான அரசியல் அவருக்கே பெரும் பாதகமாகப் போய் விடும் போல தெரிகிறது. எதிலுமே பிடிப்புடன் அவர் செயல்படுவதாக தெரியவில்லை. எல்லாவற்றிலும் மிக மிக நிதானம் காட்டுகிறார். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் இருக்கிறார். எது நடந்தாலும் அலட்டிக் கொள்ளவும் செய்வதில்லை. ஆனால் இது அவருக்கு சரியானதாக இருக்காது. அவர் உடனடியாக சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கல் என்று அவரது நலம் விரும்பிகள் எச்சரிக்கிறார்கள்.


இதற்கு உதாரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டங்களில் தவறாமல் தவெக கொடியுடன் பலர் வருவதை அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் தவெகவினரா என்று தெரியவில்லை. இதை விஜய்யும் உடனடியாக விளக்க வேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாமல் அவருக்கு நாளை சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.




எடப்பாடி பழனிசாமி, தவெகவை மறைமுகமாகக் குறிப்பிட்டு கூட்டணி வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகக் கூறி, புரட்சியின் ஒலி என அதை வர்ணித்துள்ளார். தனது பிரச்சாரத்தின் போது, தவெக கொடிகள் அசைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, இது பிள்ளையார் சுழி என்றும், இது புரட்சியின் ஒலி என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரடியாகக் குறிப்பிட்டு, இந்த ஒலி உங்களை செவிடாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.


ஆனால் இதுவரை அதிமுக தவெக கூட்டணி தொடர்பாக இரு கட்சியிலும் அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வரவில்லை. இப்படி இருக்கையில் விஜய்யின் கட்சிக் கொடிகள் அதிமுக கூட்டங்களில் பறப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தரப்பில், NDA கூட்டணி குறித்த கூற்றுகளை மறுத்துள்ளது. கொடிகளை ஏந்தியவர்கள் கட்சி உறுப்பினர்கள் அல்ல, மாறாக அதிமுக ஆதரவாளர்கள் என்று அக்கட்சி கூறுகிறது.


இந்த விவகாரத்தில் விஜய் உடனடியாக மெளனம் களைய வேண்டும். நாளை எல்லை மீறிய பின்னர் விஜய் பேச முடியாத சூழல் உருவாகி விடலாம். அவருக்கு பல்வேறு நிர்ப்பந்தங்கள் உருவாக இது வாய்ப்பாகி விடும். விஜயகாந்த்துக்கும் இப்படித்தான் முன்பு நடந்தது. அவர் யாருடன் கூட்டணி என்ற குழப்பத்தில் இருந்தபோது அதிமுக கூட்டணிக்கு பல தரப்பிலும் அவருக்கு நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்பட்டன. அவரது கட்சியினரே அதிமுக கூட்டணிக்கு குரல் கொடுக்கத் தொடங்கியதால் வேறு வழியில்லாமல் அதிமுக பக்கம் சாய்ந்தார் விஜயகாந்த் என்பது நினைவிருக்கலாம்.