தவெக கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
சென்னை: தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு. மனு மீது 6 வாரங்களில் பதில் அளிக்க தவெக தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தவெக கொடியை பயன்படுத்த தடை விதிக்ககோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு என்பது தங்களது வணிக சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிறத்திலான கொடியை தவெக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, இரு கொடிகளையும் ஒப்பிடும் போது, மனுதாரர் சபை கொடியை த.வெ.க பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது எனவும், இரு கொடிகளையும் ஒப்பிடும் போது, த.வெ.க. கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் கூறுகையில், மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.