தவெக ரோட்ஷோவுக்கு அனுமதி இல்லை.. கூட்டம் நடத்தவும் குறுகிய காலம்.. புதுச்சேரி திட்டம் கேன்சல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் கட்சி நடத்தவிருந்த ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுக்கூட்டம் நடத்துவதும் ரத்தாகியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த மாதம் பதினோராம் தேதி விஜயின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து அவரது அனைத்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதால் புதுச்சேரி நிகழ்வும் ரத்தானது.
இந்த நிலையில் டிசம்பர் 5ஆம் தேதி புதுச்சேரியில் பிரம்மாண்ட ரோடு ஷோவும் கூடவே பொதுக்கூட்டமும் நடத்த விஜய்யின் கட்சி திட்டமிட்டு இருந்தது. இதற்காக புதுச்சேரி காவல்துறையில் ரோட்ஷோ கேட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை காவல்துறை நிராகரித்துவிட்டது. அண்டை மாவட்டங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு தருவது கடினம், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் ரோட் ஷோ நடத்த வாய்ப்பில்லை என்று காவல்துறை தெரிவித்துவிட்டது. அதே சமயம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் விடாமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரை சென்று தமிழக வெற்றி கழகம் முயற்சித்து பார்த்தது. ஆனால் ரங்கசாமியும் கைவிரித்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பொது கூட்டம் மட்டும் நடத்துவதற்கு கால அவகாசம் மிகவும் குறைவு என்பதால் தற்போது டிசம்பர் 5ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தையும் ரோட் ஷோ நிகழ்ச்சியும் கைவிட்டுள்ளது தமிழக வெற்றிக்கழகம் கட்சி. இன்னொரு நாளில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிகிறது.
ரோடுஷோவுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் கூட விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் அவரைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த அக்கட்சியினர் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.