CM Vijay visits Trichy: இன்று திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்.. மக்களுக்கு நன்றி சொல்கிறார்!
திருச்சி: தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக, வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவிப்பதற்காகத் தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் இன்று திருச்சிக்கு பயணம் மேற்கொள்கிறார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, அவர் பங்கேற்கும் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இது என்பதால், தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே அபார வெற்றி பெற்றார். குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் 91,381 வாக்குகள் பெற்று, 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் தேதி தமிழகத்தின் 13-வது முதலமைச்சராக அவர் பதவியேற்றார். சட்ட விதிகளின்படி இரண்டு தொகுதிகளில் ஒன்றை தக்கவைக்க வேண்டிய சூழலில், அவர் பெரம்பூர் தொகுதியைத் தன்வசம் வைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
"தான் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தனக்கு விசுவாசமாக வாக்களித்து, தவெக ஆட்சி அமைக்கப் பக்கபலமாக இருந்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கும், ஒட்டுமொத்த திருச்சி மாவட்டத்திற்கும் நேரில் சென்று நன்றி கூற முதல்வர் விஜய் இந்த பயணத்தைத் திட்டமிட்டுள்ளார்."
இன்று மாலை 4 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடையும் முதல்வர் விஜய்க்கு, தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
அங்கிருந்து சாலை மார்க்கமாகப் புறப்படும் முதல்வர், திறந்த வேனில் நின்றபடி பொதுமக்களைச் சந்திக்கிறார். திருச்சி-புதுக்கோட்டை சாலை, டி.வி.எஸ். டோல்கேட், பழைய பால்பண்ணை, சஞ்சீவி நகர் வழியாகச் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தூய வளனார் கல்லூரி மைதானத்தை வந்தடைகிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.
பலத்த பாதுகாப்பு:
முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி, திருச்சி மாநகர காவல் துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் சுமார் 15,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம், சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளில் இன்று காலை முதலே போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய பேருந்து நிலையம் மற்றும் இதர பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள் மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன. மேலும், முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை யாரும் பின்தொடர வேண்டாம் என கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.