5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

May 30, 2026,10:48 AM IST

சென்னை: முதல்வர் சி. ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, அதிமுக உறுப்பினர்களாக இருந்து பின்னர் தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா செய்த மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி), அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளுக்கும் விரைவில் இடைத் தேர்தல் வரும் என்று தெரிகிறது.


இந்த ஐந்து தொகுதிகளையும் அப்படியே மொத்தமாக அள்ள தவெக தீவிரமாக உள்ளது. அதைத் தடுக்க திமுக அதிரடியாக களமாடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் தற்போது பெரும் கேள்வியாக உள்ளது.




தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களும், எதிர்பாராத நகர்வுகளும் எப்போதும் சுவாரசியமானவை. தற்போதைய சூழலில் கூட்டணி மாற்றங்கள், ராஜினாமாக்கள் ஆகியவை தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளன. 


அந்த வகையில் விரைவில் நடைபெறப் போகும் ஐந்து தொகுதி இடைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐந்திலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆளும் தவெக உள்ளது. அதில் பாதியை வென்றால் கூட போதும், தவெகவின் இமேஜைக் காலி செய்து விடலாம் என்ற எதிர்பார்ப்பில் திமுக உள்ளது. தன்னிடமிருந்து நழுவிப் போன நான்கு தொகுதிகளை எப்படித் திரும்பப் பெறப் போகிறோம் என்ற பதைப்பில் அதிமுக உள்ளது.


எதிர்க்கட்சிகளின் வியூகம் என்ன?




தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தவெகவுக்கு எதிராக அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தில் மறைமுகமாக ஒருங்கிணைந்துள்ளன. திமுக - அதிமுக இடையே  கூட்டணி ஆட்சி அமைக்கப் பேச்சுக்கள் நடந்ததாக பெரும் பரபரப்பே ஏற்பட்டது. அப்படிப் பார்க்கும்போது இடைத் தேர்தல் தொடர்பாக நிச்சயம் இவர்கள் ரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ கை கோர்க்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


அப்படி இவர்கள் சேரும்போது அமமுக, பாமக, பாஜக உள்ளிட்டவையும் கூட நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தர முன்வரும். காரணம், இவர்களுக்கும் தவெகவைப் பிடிக்கவில்லை. குறிப்பாக டிடிவி தினகரன் படு காட்டமாக இருக்கிறார்.


ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு தவெக மீண்டும் சீட் கொடுத்தால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆளுங்கட்சிக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் நிலை ஏற்படும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி பகிரங்கமாகவே கூறியுள்ளார். அப்படி என்றால் இதுகுறித்து ஏற்கனவே எதிர்க்கட்சிகளுக்குள் பேச்சுவார்த்தை நடந்து விட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.


இது ஓரளவு சாத்தியமாகத் தோன்றினாலும், நடைமுறையில் மிகவும் கடினம். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகளும், வாக்கு வங்கிகளும் உள்ளன. ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால், அந்தத் தொகுதியில் தங்களின் தனித்துவமான சின்னத்தையும், கட்சியின் செல்வாக்கையும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.


குறிப்பாக திமுக தனது வேட்பாளரை நிறுத்தவே முயலும். இல்லாவிட்டால் அதிமுக நிறுத்தும். இதில் திமுக வேட்பாளரை அதிமுக ஆதரித்தாலோ அல்லது அதிமுக வேட்பாளரை திமுக ஆதரித்தாலோ நிச்சயம் அது அந்தக் கட்சிகளின் அஸ்தமனத்துக்கான முன்னுரையாகவே இருக்கும். காரணம், இவர்கள் இருவரும் ரகசியக் கூட்டாளிகள் என்று தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கடுமையாக சாடி வந்தார். இது உண்மைதானோ என்று மக்கள் எண்ணும் அளவுக்கு தேர்தலுக்குப் பிந்தைய சம்பவங்கள் எடுத்துக் காட்டின. ஒரு வேளை பொது வேட்பாளரை நிறுத்த அவர்கள் தீர்மானித்தால் இதுதான் சரியான நேரம் என்று மொத்தப் பேரையும் தவெக மக்களிடம் அம்பலப்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. அதை மக்கள் ஏற்றால் அத்தனைக் கட்சிகளுக்கும் எதிர்காலமே இல்லாமல் போய் விடும்.


அதேசமயம், ஆளுங்கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் தீவிரமாக இருந்தால் மட்டுமே, மிக அரிதான சூழலில் எதிர்க்கட்சிகள் ஒரு பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால், தற்போதைய சூழலில் கட்சிகள் தங்களின் சொந்த பலத்தைக் காட்டவே விரும்புவதால், பொது வேட்பாளர் அமைவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.


திராவிட அரசியலின் இரு பெரும் துருவங்களான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு இடையே மறைமுக ஆதரவு என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்று.. என்றுதான் பலரும் இந்தத் தேர்தல் வரை நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தவெகவை வீழ்த்த எந்த லெவலுக்கும் அவர்கள் இறங்கக் கூடும் என்பதை அரசியல் நிகழ்வுகள் காட்டி விட்டன.


அதேசமயம், அதிமுக, திமுக-வுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்தால், அது அந்த கட்சியின் அடிப்படை வாக்கு வங்கியையும், தொண்டர்களின் நம்பிக்கையையும் சிதைத்துவிடும். இப்போது அதிமுக சிதைய ஆரம்பித்திருப்பதற்கும் கூட அதுதான் காரணம். தேர்தல் களம் என்று வந்துவிட்டால் அதிமுக தனது முழு பலத்தையும் காட்டி திமுக-வை வீழ்த்தவே நினைக்குமே தவிர, எந்த வடிவிலும் (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) ஆதரவு தராது.  இதே நிலையில்தான் தற்போது திமுகவும் உள்ளது.


தேர்தல் புறக்கணிப்புக்கு வாய்ப்புள்ளதா?




தேர்தல் புறக்கணிப்பு என்பது ஜனநாயகத்தில் ஒரு வலுவான ஆயுதமாகப் பார்க்கப்பட்டாலும், தற்கால அரசியலில் அது பின்னடைவையே தரும்.


பிரதான எதிர்க்கட்சியான திமுக தேர்தலைப் புறக்கணித்தால், அது ஆளுங்கட்சிக்கு எளிதான வெற்றியைத் தேடித்தந்துவிடும். மேலும், களம் தங்களுக்குச் சாதகமாக இல்லை என்று பயந்து ஓடிவிட்டதாக ஒரு பிம்பம் உருவாகிவிடும்.


இதேபோலத்தான் அதிமுகவுக்கும் பெயர் கிடைக்கும். ஆனால் கடந்த திமுக ஆட்சியில் அதிமுக தேர்தலைப் புறக்கணித்த வரலாறு உள்ளது. எனவே இந்த இடைத் தேர்தலையும் அதிமுக புறக்கணிக்க வாய்ப்புள்ளது என்றே எடுத்துக் கொள்ளலாம்.


முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து நிற்கிறது. ஆனானப்பட்ட அதிமுகவையே அது கிடுகிடுக்க வைத்துள்ளது. திமுகவை அடித்து ஓரம் கட்டி விட்டது. 


புதிய கட்சிகளுக்கு எப்போதுமே அடிமட்ட அளவில் வலுவான, தேர்தல் களம் தெரிந்த நிர்வாகிகள் தேவை. அந்த வகையில்தான், அதிமுகவில் இருந்து விலகி வரும் அனுபவமிக்க நிர்வாகிகளை தவெக வரவேற்று வருகிறது. இருப்பினும் எல்லோரையும் அது வாரிப் போட்டுக் கொள்ளவில்லை. செலக்டிவாகத்தான் உள்ளே இழுத்து வருகிறது.


ராஜினாமா செய்துவிட்டு வரும் நபரின் மக்கள் செல்வாக்கு, அந்தத் தொகுதியில் அவருக்கான வாக்கு வங்கி மற்றும் அவரது தூய்மையான பின்னணி ஆகியவற்றை ஆராய்ந்தே தவெக சீட் தரும். தற்போது அதிமுகவிலிருந்து தவெகவுக்கு வந்துள்ள நான்கு முன்னாள் எம்எல்ஏக்களும் சொந்த செல்வாக்கும் ஓரளவு கொண்டவர்கள் ஆவர். இதனால் தவெக அவர்களுக்கு மீண்டும் சீட் தர வாய்ப்பு தரும். சீட் தருவோம் என்ற உறுதிமொழி கொடுத்திருக்கவும் வாய்ப்புள்ளது.


இருப்பினும் இந்த இடைத் தேர்தலானது தவெகவுக்குத்தான் மிகப் பெரிய ஆசிட் டெஸ்ட். திமுகவும் சரி, அதிமுகவும் சரி இழப்பதற்கு எதுவும் இல்லை. எது கிடைத்தாலும் அவர்களுக்கு லாபம்தான். ஆனால் தவெக எதையாவது இழந்தால் அது அந்தக் கட்சியின் இமேஜை ஆட்டிப் பார்த்து விடும் என்பதால் திருச்சி கிழக்கு மட்டுமல்லாமல், மொத்த தொகுதிகளையும் அள்ளவே அது முயலும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முடிவுக்கு வந்த குழப்பம்.. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைப்பு

news

கேரளத்தில் பதிவான வழக்கு: தமிழகத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!

news

5 தொகுதி இடைத் தேர்தல்.. தவெக வியூகம் என்ன.. திமுக என்ன பண்ணப் போகுது.. அப்போ அதிமுக?

news

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் முறைகேடு...பகீர் கிளப்பிய எம்.பி. ஜோதிமணி

news

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய விவகாரம்: தவெக.,க்கு கோர்ட் உத்தரவு

news

"தமிழ்நாடு தாங்காது CM Sir!".. முதல்வருக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய உதயநிதி

news

அமைச்சரின் பி.ஏவிடம் ரூ.4000 லஞ்சம் கேட்டு தொக்காக மாட்டிக் கொண்ட திருச்செந்தூர் அர்ச்சகர்கள்

news

வைஷ்ணவதேவி கோவிலுக்குச் செல்லத் திட்டம்.. பலத்த இடியுடன் மழை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 11)

news

ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தும்.. மழை குறையும்.. வானிலை மையம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்