தவெக ஆட்சியமைப்பது உறுதியானது.. தொடங்குகிறது விஜய் சகாப்தம்!

Su.tha Arivalagan
May 08, 2026,05:03 PM IST

- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி மோகன்


" தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் 

தோன்றலிற் தோன்றாமை நன்று"


வள்ளுவரின் இந்தக் குறள் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான விஜய்க்கே சாலப் பொருந்தும்.


பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தாண்டி விஜய் தலைமையில் தவெக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் இதுவரை காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள்தான் இதுவரை ஆட்சியமைத்துள்ளது. முதல் முறையாக இந்தக் கட்சிகள் சாராமல் புதிய கட்சி ஒன்று ஆட்சியமைக்கவுள்ளது தமிழக வரலாற்றில் புதிய சரித்திரமாக மாறியுள்ளது. இந்த நேரத்தில் விஜய்யின் வரலாற்றை அறிவது பொருத்தமாக இருக்கும்.


விஜய் ஜூன் 22, 1974 ல் சென்னையில் பிறந்தார். இவரது தந்தையார் S .A சந்திரசேகர், சிறந்த திரைப்பட இயக்குனர். தாயார் ஷோபா சந்திரசேகர் ஒரு சிறந்த பின்னணிப் பாடகி. விஜய்க்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் ஜோசப் விஜய். விஜய்க்கு வித்யா என்ற ஒரு தங்கையும் இருந்தார். அவர் தனது 2  வயதிலேயே உடல் நலக்குறைவு காரணமாக மறைந்து விட்டார். தனது தங்கை மீதான பாசம் காரணமாகவே விஜய் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு 

V.V.கிரியேஷன்ஸ் (விஜய் - வித்யா ) என்று பெயரிட்டார்.




விஜய் தனது ஆரம்பக் காலக் கல்வியை சென்னையில் உள்ள பாத்திமா மெட்ரிக்குலேசன் பள்ளியில் பயின்றார். பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள பால் லோக் மேல் நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் Visual Communication பாடப் பிரிவில் சேர்ந்தார். ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக கல்லூரிப் படிப்பை முதல் ஆண்டிலேயே கைவிட்டார்.தந்தை S.A. சந்திரசேகர் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த்துடன் 1992ல் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.


விஜய் நடித்த  வெற்றித் திரைப்படங்கள் வரிசையில் சில!


கண்ணுக்குள் நிலவு (25 வது படம் 2000 ல் )

50 வது திரைப்படம் 

சுறா 2010 ல்)

67 வது திரைப்படம் லியோ 2023 ல் )

68 வது திரைப்படம் 

தி கிரேட் டெஸ்ட் ஆஃப் ஆல் டைம் 2024 ல்)

69 வது திரைப்படம் 

ஜன நாயகன் 2026 ல்)


விஜய் நடித்த 69 படங்களும் அவரது 30 ஆண்டு கால கடின உழைப்புக்கும், தமிழ் சினிமாவின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத ஆர்வத்திற்கும் சான்றாக அமைந்தது.


1996 ல் அவர் நடித்த பூவே உனக்காக அவருக்குத் திருப்பு முனை தந்த படம். 1997 ல் அவர் நடித்த லவ் டுடே இளைஞர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 1997 ல் அவர் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படம் அவருக்கு மாநில அரசு விருது பெற்றுத் தந்தது. தொடர்ந்து 1999 ல் துள்ளாத மனமும் துள்ளும், 2000ல் குஷி, 2001 ல் ப்ரியமானவளே, பிரெண்ட்ஸ், 2003 ல் திருமலை, ஷாஜகான், 2004ல் கில்லி ( 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது) 


2006 ல் திருப்பாச்சி, 2007 ல் யூத், பத்ரி, அழகிய  தமிழ் மகன், போக்கிரி, 2011 ல் காவலன், 2012 ல் நண்பன், ஜில்லா என்று பலப்பல வெற்றிப் படங்களில் நடித்து சாதனை புரிந்தார். விஜய் அவர்கள் சக நடிகர்களிடம் காட்டும் பணிவு, தொழில் பக்தி, எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் காட்டும் நிதானம், எளிமையான குணம் மற்றும் எளியோருக்கும், கல்வி கற்க வசதி இல்லாத சூழலில் உள்ளோருக்கும் சத்தம் இல்லாமல் உதவி செய்யும் பண்பு இவையெல்லாம் சேர்ந்து தான் இன்று விஜய்க்கு கோடானு கோடி மக்கள் மனதில் இதயத்தில் நீங்கா இடம் தந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.


2012 முதல் 2026 ம் ஆண்டு வரை சமூகப் பொறுப்புள்ள துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்க்கார், மாஸ்டர், லியோ, பைரவா, பிகில், வாரிசு மற்றும் 2024 ல் தி கிரேட்டெஸ்ட் ஆஃப் ஆல் டைம்  ( The Goat ) என்ற திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். 2026 ல் வெளியான ஜன நாயகன் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் நடித்த இறுதிப் படம்.இது மற்ற  எல்லாத் திரைப்படங்களையும் விட மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும், ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.


திரைத்துறையில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்த விஜய் 2024 ல் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பல இடங்களில் அவர் கட்சிக் கூட்டம் நடத்தி மிகச் சிறப்பாகப் பேசியது இளைஞர்களையும் அவரது ரசிகர்களையும் கவர்ந்தது. கரூரில் நடந்த பல உயிர்கள் பலி காரணமாக விஜய் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனாலும் மனம் தளராமல் நிதானமாகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் அவர் கட்சிக் கூட்டத்தில் தொடர்ந்து பயணித்து மக்களின் மனதில்  மட்டுமல்ல சிறு குழந்தைகளின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார் என்பதே உண்மை.


தொடர்ந்து 2026 மே 24 ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.


அரசியல் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக பலவிதமான விமர்சனங்களுக்கு ஆளான விஜய் அவர்கள் தன் அன்பிற்குரிய மக்கள் தந்த ஆதரவால் பல தசாப்தங்களாக மிகப் பெரும் சக்தியாக இருந்து வந்த தி‌.மு.க மற்றும் அ‌.தி.மு.க.கட்சிகள் இடையே  நிலவிய அதிகாரப் போட்டியைத்  தனியொரு நபராகத் துணிந்து எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களைப் பிடித்து சரித்திரம் படைத்துள்ளது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். தி.மு.க.வின் பலம் என்று கருதப்படும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளைக் கைப்பற்றி விஜய் கட்சி சாதனை படைத்துள்ளது.


திரைப்படங்களில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்த விஜய் நிஜ வாழ்க்கையிலும் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் படைப்பார் என்பது  தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.   சினிமா வாழ்க்கையில் மக்கள் மனதில் தளபதியாக இடம் பிடித்த விஜய் ஒரு நல்ல முதல்வராகவும் தமிழக  மக்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).