பல மணி நேர தாதமத்திற்குப் பின்னர் மரக்கடைக்கு வந்து சேர்ந்தார் விஜய்.. பேசப் போவது என்ன?

Su.tha Arivalagan
Sep 13, 2025,02:49 PM IST

திருச்சி : தவெக தலைவர் தலைவர் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை இன்று திருச்சி மரக்கடை பகுதியில் துவக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் போலீசார் அனுமதித்த நேரத்தை கடந்தும் இதுவரை விஜய் தனது பிரச்சாரத்தை துவக்கவில்லை. இப்போதுதான் அவர் அந்தப் பகுதிக்கே வந்து சேர்ந்துள்ளார். இனிதான் அவர் பேசப் போகிறார்.


தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் மாநில மாநாடுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டார். இந்த இரண்டு மாநாட்டிலும் லட்சக்கணக்கில் ரசிகர்களும், தொண்டர்களும் குவிந்தனர். மாநாட்டை தொடர்ந்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை செப்டம்பர் 13ம் தேதி திருச்சியில் துவக்கி, டிசம்பர் 20ம் தேதி மதுரையில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக விஜய்யின் தேர்தல் பிரச்சார பயணம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். 


திருச்சியில் பல்வேறு இடங்களை தவெக.,வினர் குறிப்பிட்டும் அந்த இடங்களில் போலீசார் அனுமதி வழங்கவில்லை. கடைசியாக 23 நிபந்தனைகளுடன் விஜய்க்கு பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ரோட்ஷோ நடத்தக் கூடாது, 10.35 முதல் 11 மணி வரையிலான நேரத்தில் மட்டுமே விஜய் பேச வேண்டும், பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, விஜய் செல்லும் வாகனத்துடன் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்க திட்டமிட்டார் விஜய்.




தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய், தனது பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக நவீன வசதிகளுடன் தவெக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள வாகனத்தில் ஏறி திருச்சி மரக்கடை பகுதி நோக்கி புறப்பட்டார். ஆனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் வாகனம் புறப்பட்டதில் இருந்தே, சாலையில் இரு புறங்களிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மக்கள் கூடி இருந்து விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு நடுவே மெதுவாக ஊர்ந்து விஜய்க்கு வாகனம் மரக்கடை பகுதி நோக்கி பயணம் செய்தது.


விஜய்க்கு பிரச்சாரம் செய்வதற்காக போலீசார் ஒதுக்கிய நேரம் காலை 10.35 முதல் 11 மணி வரை மட்டுமே. அந்த வகையில் விஜய் பிரச்சாரத்திற்காக திருச்சி மரக்கடையில் பேசுவதற்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் ஏற்கனவே முடிந்து விட்டது. ஆனால் மரக்கடை பகுதிக்கு விஜய் வந்து சேருவதற்கே பல மணி நேரமாகி விட்டது. இன்னும் சில நிமிடங்களில் அவர் பேசத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த இடத்தில் பேசி முடித்த பின்னர் அவர் ஏற்கனவே திட்டமிட்ட இடங்களிலும் திட்டமிட்ட நேரத்தில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எல்லா இடத்திலும் நேரம் தவறி விட்டதால் அடுத்தடுத்து என்ன மாதிரியான நடவடிக்கைகள் அமையும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பேசத் தவறியதால் அடுத்தடுத்து இடங்களில் காவல்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.