டெல்லியில் விஜய்.. கரூர் சம்பவம் தொடர்பாக.. இன்று சிபிஐ விசாரணை

Su.tha Arivalagan
Jan 12, 2026,10:11 AM IST

டெல்லி: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்காக இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் குழு விசாரணை நடத்தவுள்ளது.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


கரூர் விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முதலில் சிபிஐ விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தவெக பிரமுகர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரிடம் பல மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த நிலையில், முதல் தகவல் அறிக்கையில் பெயர் இல்லாவிட்டாலும் கூட, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய்க்கு சிபிஐ அண்மையில் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.




அவர் கலந்து கொண்ட கூட்டம் என்பதால் அவரிடமும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. அதன்படி இன்று சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராவதற்காக தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று முற்பகல் 11 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் விஜய் விசாரணைக்காக ஆஜராகவுள்ளார்.


டெல்லியில் விஜய் ஆஜராவதை ஒட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவெக தரப்பில் டெல்லி காவல்துறையிடம் கூடுதல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. 


செப்டம்பர் 27, 2025 அன்று கரூரில் நடந்த கூட்டத்தில் அனுமதித்த அளவை விட அதிகமான மக்கள் கூடியதே நெரிசலுக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) ரத்து செய்த உச்சநீதிமன்றம், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக தவெக நிர்வாகிகள் சிபிஐ-யிடம் ஆதாரங்களையும், வீடியோ காட்சிகளையும் சமர்ப்பித்துள்ளனர். இன்று விஜய்யிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து, சிபிஐ இந்த வழக்கில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.