விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!

Su.tha Arivalagan
Nov 27, 2025,11:41 AM IST
சென்னை :  முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தவெகவில் இணைந்துள்ளதன் மூலம், அதிமுகவுடன் தவெக கூட்டணி என்ற எதிர்பார்ப்பு முழுமையாக தகர்ந்து போயுள்ளது. செங்கோட்டையனை சேர்த்துக் கொண்டு அதிமுகவுடன் விஜய் கை கோர்க்க வாய்ப்பு மிகவும் குறைவு.

கொங்கு மண்டலத்தில் அதிமுக.,வின் முகமாக எம்ஜிஆர்., காலம் முதலே அறியப்பட்ட கே.ஏ.செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்எல்ஏ.,வாக இருந்தவர். இவர் கட்சியின் அதிமுக தலைமைக்கு கெடு விதித்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு பிறகு சமீபத்தில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோருடன் சேர்ந்து பசும்பொன்னிற்கு சென்றதால் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டார். 





இதனால் செங்கோட்டையன் அடுத்து என்ன செய்ய போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் தான் தாங்க முடியாத மன வேதனையில் இருப்பதாக தொடர்ந்து அவர் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவர் விஜய்யின் தவெக.,வில் இணைய உள்ளதாக மீடியாக்களில் தகவல் பரவி வந்தது. ஆனால் செங்கோட்டையன் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. தவெக தரப்பிலும் அமைதி நிலவியது.

இந்நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக நேற்று காலை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த செங்கோட்டையன் தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்வதற்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் ராஜினாமா கடிதம் அளித்த சில நிமிடங்களிலேயே அமைச்சர் சேகர்பாபு, செங்கோட்டையனை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததால், செங்கோட்டையன் திமுக.,வில் இணைய போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. தவெக.,வில் இணைவது பற்றி இன்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள் என பதிலளித்து விட்டு சென்றார்.

இதனால் இன்று செங்கோட்டையன், தவெக.,வில் இணையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப நேற்று சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு சென்று, செங்கோட்டையன் அவரை சந்தித்தார். இதனால் அவர் தவெக.,வில் இணைவது உறுதியானது. இன்று முறைப்படி கட்சியில் சேர்ந்து விட்டார்.

செங்கோட்டையன் தவெகவுக்கு வந்துள்ளதன் மூலம் இன்னொரு விஷயத்தையும் அக்கட்சி மறைமுகமாக உணர்த்தியுள்ளது. அதாவது அதிமுகவுக்கு குட்பை சொல்லியுள்ளது தவெக. எடப்பாடி பழனிச்சாமியின் மிகத் தீவிரமான எதிர்ப்பாளரை தவெகவில் சேர்த்துள்ளதன் காரணமாக அதிமுகவில் சேர வாய்ப்பில்லை என்பதை தவெக உணர்த்தியுள்ளது. மேலும் பாஜகவுடனும் அது கூட்டணி சேர வாய்ப்பில்லை. எனவே வருகிற தேர்தலில் தவெக தலைமையில் தனி அணி அமையப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இது யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம், விஜய்யின் நிலைப்பாடு அவர் எதிர்பார்த்த விளைவுகளைத் தருமா என்பதை தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் அறிய முடியும்.