நாகையில் நாளை விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றம்

Meenakshi
Sep 19, 2025,12:57 PM IST

நாகை:  நாளை நாகையில் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ள இடம் மாற்றப்பட்டுள்ளது.


2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. முக்கிய கட்சித் தலைவர்களும் பல்வேறு கட்டங்களாக சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தாண்டின் புது வரவான தவெக கட்சியும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு காட்டி வருகிறது.


தவெக கட்சியின் தலைவர் விஜய், கட்சி ஆரம்பித்த பின்னர் விக்கிரவாண்டியிலும், மதுரையிலும் பிரம்மாண்ட அளவில் 2 மாநாடுகளை நடத்தியுள்ளார். இது தவிர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தையும் அவ்வப்போது நடத்தி கட்சியை பலப்படுத்தி வருகிறார். இதுமட்டுமின்றி,  கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் பூத் கமிட்டி மாநாடுகள் மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மாநிலம் தழுவிய அளவில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். 




திருச்சியில் நடந்த முதல் பிரச்சார பயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த தவெகவினர் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிகள் வகுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து தவெகவினரின் இரண்டாம் கட்டப் பிரச்சாரம் நாளை நாகையில் நடைபெற உள்ளது. இதற்காக புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி ஸ்டேடியம், நாகூர் புதிய பஸ் ஸ்டாண்ட், வேளாங்கண்ணி ஆர்ச் ஆகிய இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நாகை போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதற்கு போலீசார் மேற் குறிப்பிட்ட இடங்களில் புத்தூர் ரவுண்டானாவிற்கு பதிலாக அண்ணா சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளனர். 


இதன் காரணமாக நாளை பிற்பகல் 12.30 மணியளவில் நாகையில் உள்ள  அண்ணாசிலை அருகே விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பிரச்சாரம் அரை மணி நேரத்தில் பேசி முடிக்க வேண்டும் என்றும், விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடரக்கூடாது, மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்க்கூடாது எனவும் போலீசார் தரப்பில் நிபந்தனை விதக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தவெக தலைமை நிலையச் செயலக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவர் அவர்களின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும். நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டாளர் குழுக்கள் விவரம், இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு: நாகப்பட்டினம் மாவட்டம்: இடம்: நாகப்பட்டினம், புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு, நேரம்: காலை 11.00 மணி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு: 1. திரு.M.சுகுமார் 2. திரு.A.கிங்ஸ்லி ஜெரால்டு 3. திரு.SKG.A.சேகர் 4. திரு.R.சுரேஷ்குமார் 5. திரு.M.அஹ்மது தம்பி மரைக்காயர் 6. திரு.H.S.பாலமுருகன் 7. திரு.⁠G.தினேஷ்ராஜ் திருவாரூர் மாவட்டம்: இடம்: நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதி நேரம்: மாலை 3.00 மணி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு: 1. திரு.S.மதன் 2. திரு.G.ஆனந்த் 3. திரு.K.காந்தி 4. திரு.S.பிரபாகரன் 5. திரு.K.கவியரசன் 6. திரு. UVM ராஜா (எ) ராஜராஜன் 7. திரு.S சாதிக் அலி 8. திரு.K.ராஜராஜசோழன் 9. திரு.C.ரஞ்சித் (எ) மணிமாறன் 10. திரு.P.பாரத் (எ) முகுந்தன் 11. திரு.G.P.பாரதி 12. திரு.V.மணிகண்டன். 13. திரு.N.P.ஜெஸ்வரன் 14. திரு.J.பாரதிதாசன் 15. திரு.S.சிவப்பிரகாஷ் வெற்றித் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவர் அவர்களுடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.