சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா முத்துராமலிங்கத் தேவர்: விஜய்

Meenakshi
Oct 30, 2025,05:19 PM IST

சென்னை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது ஜெயந்தி மற்றும் 63ம் ஆண்டு குருபூஜை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான விழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.


இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  




விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகத் தமது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கத்திற்காகத் தன்னை அர்ப்பணித்த அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை தினத்தில், எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.