தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
சென்னை : தமிழக அரசியல் களவில் முக்கியத் திருப்பமாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசியல் கட்சிக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அத்துடன், வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக தவெகவின் கோரிக்கையை ஏற்று, அக்கட்சியின் தேர்தல் சின்னமாக 'விசில்' (Whistle) சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
மாநிலக் கட்சி அங்கீகாரம் :
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இக்கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கி இருந்தது தேர்தல் கமிஷன். இந்த சின்னம் மக்களின் ஆதரவை பெற்று, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, தற்போது ஆளும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், நடக்க இருக்கும் தமிழக இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றிற்காக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றுகளை பரிசீலித்த இந்திய தேர்தல் ஆணையம், தமிழக வெற்றிக் கழகத்தை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக முறைப்படி அறிவித்துள்ளது. அதோடு விசில் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கியத்துவமும் எதிர்காலத் திட்டங்களும் :
மாநிலக் கட்சி அங்கீகாரம் கிடைத்தன் மூலம், தேர்தலில் தனிச் சின்னம் பெறுவது, வாக்காளர் பட்டியல்களைப் பெறுவது மற்றும் பிரச்சார நேரங்களை முறைப்படுத்துவது போன்ற பல முக்கிய உரிமைகளைத் தவெக பெற்றுள்ளது. இதனால் அதிமுக.,வின் இரட்டை இலை, திமுக.,வின் உதயசூரியன் ஆகிய பிரபலமான தேர்தல் சின்னங்களின் பட்டியலில் தற்போது விசில் சின்னமும் இடம்பிடித்துள்ளது. இனி வரும் தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் விசில் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது.
பிரச்சாரம் ஆரம்பம் :
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், என்ன சின்னம் என்ற குழப்பம் தவெக தொண்டர்களிடம் ஏற்பட்டது. தற்போது தேர்தல் கமிஷனே சொல்லி விட்டதால் விசில் சின்னத்தை ஆதரித்து இப்போதே விர்சுவல் வாரியர்ஸ் சோஷியல் மீடியாவில் பிரச்சாரத்தை துவங்கி விட்டனர்.